பாராளுமன்றத்தை எதிர்வரும் 12ஆம் திகதியே கூட்டுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக அரசாங்க தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 26ஆம் திகதி புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டதனை தொடர்ந்து நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த நிலையில இவ் அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாண விரைவில் பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது.
எதிர்வரும் 7ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்ட இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்ததாக சபாநாயகர் குறிப்பிட்டிருந்தார். அதன் பிரகாரம் பாராளுமன்றம் கூடுமாக இருந்தால், அதற்கான வர்த்தமானி நேற்று அல்லது நேற்று முன்தினம் வெளியாகியிருக்க வேண்டும். காரணம் நாடாளுமன்றத்தைக் கூட்ட குறைந்தது மூன்று நாட்களாவது அவசியமென தெரிவிக்கப்படுகிறது.
நாளை மறுதினம் தீபாவளி பண்டிகை காரணமாக விடுமுறை தினம் என்பதால் அதற்கு பின்னர் நாடாளுமன்றத்தை கூட்டுவதாயின் 12ஆம் திகதியே சாத்தியமென கொழும்பில் இருந்து வெளிவரும் சண்ஈட ரைம்ஸ் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
புதிய பிரதமர் நியமனத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணையை கொண்டு வருவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. விரைவில் பாராளுமன்றத்தை கூட்டுமாறு ஐ.தே.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்ற நிலையில், எவர் என்ன சொன்னாலும் ஜனாதிபதி ஏற்கனவே அறிவித்தபடி 16ஆம் திகதியே பாராளுமன்றத்தை கூட்டுவோம் என மகிந்த அணி தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது