(டிஜிபி சாங்கிலியானா – காவற்துறை அதிகாரி ருபா – நிர்பயாவின் தாய் ஆஷா தேவி – சாதனை படைத்த பெண்களுக்கான விருதுவழங்கும் விழாவில்)
“நிர்பயாவின் தாய் நல்ல உடல்வாகுடன் இருக்கிறார். அவரைப் பார்க்கும்போது, நிர்பயா எவ்வளவு அழகாக இருந்திப்பார் என என்னால் கற்பனை செய்யமுடிகிறது” என கர்நாடகாவின் முன்னாள் டிஜிபி சாங்கிலியானா சில நாள்களுக்கு முன்பு நிர்பயாவின் தாய் கலந்து கொண்ட நிகழ்வில் தெரிவித்த கருத்து இது. இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்குப் பெரும் கண்டனங்கள் எழுந்தன. இதற்கு பதிலளித்து, கபர் லஹரியா (Khabar Lahariya) என்ற இந்திச் செய்தித்தாளில், நிர்பயாவின் தாய் ஆஷா தேவி, கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
“நீங்கள் என் உடல் பற்றி கருத்து கூறியபோது, இந்தச் சூழ்நிலைக்கு இது பொருத்தமாக இருக்குமா இருக்காதா என்று இம்மியளவும் நினைத்துப் பார்க்கவில்லை. ஒரு கொடூரமான மரணத்தைத் தழுவிய என் மகளின் அழகைப் பற்றி பேசுவது அநாகரிகமான ஒன்று. மிகவும் அறுவெறுக்கத்தக்க கருத்தைக் கூறிவிட்டு, இளம்பெண்களுக்கு அளித்த அறிவுரையை எல்லை தாண்டிய பேச்சாக கருதுகிறேன்.”
நிர்பயாவின் – தாய் தந்தை
“சூழ்நிலை எல்லை மீறிச் செல்லும்போது, ஒரு பெண்ணாக அந்தச் சூழலைச் சமாளிக்க, அவர்களிடம் சரணடைந்துவிடுங்கள். அப்படியாவது உங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்’ என்று கூறியிருக்கிறீர்கள். என் மகளின் போராட்டத்தை இழிவுபடுத்தியது மட்டுமன்றி, நம் சமூகத்தில் இருக்கும் மிக மோசமான ஆணாதிக்க மனநிலையையும் பிரதிபலித்துள்ளீர்கள். என் மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குற்றவாளிகளுக்கும் இதே மனநிலைதான் இருந்தது. அவள் அவர்களை எதிர்த்துப் போராடுகிறாள் என்ற உண்மையை அவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. உங்களைப் போன்ற `சமூகத்தைக் காக்கும் பொறுப்பில் இருப்பவர்களும்’, அந்தக் குற்றவாளிகளும் ஒரே மாதிரிதான் சிந்திக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.”
டிஜிபி சாங்கிலியானா – நிர்பயாவின் தாய் ஆஷா தேவி
“காலங்காலமாக நம் பெண்களுக்கு வலியுறுத்தப்படும் அதே பிற்போக்கான மனப்பாங்கையே நீங்கள் கூறியிருக்கிறீர்கள். சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் பெண்கள் அதனை அனுசரித்து, சகித்து வாழ வேண்டும். அவர்கள் பலவீனமானவர்களாகவே இருக்க வேண்டும். யாராவது அவளை ஒரு விஷயத்துக்கு வற்புறுத்தினால், அதனை எதிர்த்து குரல் எழுப்பாமல் அமைதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் ஒரு பெண்ணை, அவளின் வாழ்க்கையை அவர்கள் வாழவிடுவார்கள் அல்லவா? இறுதியாக, நான் உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். இப்படி ஓர் அறிவுரையை நம் இந்திய ராணுவ வீரர்களுக்கு அளிப்பீர்களா? இரவும் பகலும் நம் எல்லைகளைக் காக்கும் அவர்களிடம், அடுத்த முறை நம் எதிரிகள் தாக்கினால், உங்கள் ஆயுதத்தைக் கைவிட்டு சரணடையுங்கள் என்று கூறலாமா? அதனால், நம் வீரர்களின் உயிராவது காப்பாற்றப்படும் என்று சொல்லலாமா?” எனதன் எடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள்…
2012-ம் ஆண்டு, டில்லியில் ஓடும் பேருந்தில், ஆறு பேரால் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர் நிர்பயா மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 13 நாள்கள் போராடி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பல விவாதங்களுக்கும் சட்ட வழிகாட்டுதல்களுக்கும் வழிவகுத்தது. ஆனால், பெண்ணுரிமை குறித்தும் பெண் சுதந்திரம் குறித்தும் நம் சமூகத்தில் நிலவும் மிகவும் பிற்போக்கான மனநிலை மட்டும் இன்னும் மாறவில்லை. அதன் சாட்சிதான் சாங்கிலியானா.