ஐ.நா. மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளபோதிலும் பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கான அழுத்தங்களை தொடர்ந்து பிரயோகிப்போம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் உறுதியளித்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சரை அமெரிக்கத் தூதுவர் சந்தித்து கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐ.நா.மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளபோதிலும் இலங்கை தொடர்பான பிரேரணையை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் அமெரிக்காவுடன் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியுள்ளது.
இதனால் அந்த பொறுப்புக்கூறும் விடயத்திலிருந்து இலங்கை அரசாங்கம் நழுவிவிட முடியாது. இதற்கான அழுத்தங்களை தொடர்ந்தும் அமெரிக்கா முன்வைக்கும். அரசாங்க உயர்மட்டத்தினருக்கு இவ்விடயம் தொடர்பில் எடுத்துக்கூறப்பட்டு உள்ளது.. இதனால் பிரேரணையை அமுல்படுத்தும் விடயத்தில் அமெரிக்கா தொடர்ந்தும் அக்கறையை கொண்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தரப்பு வெற்றிபெறுவது கடினமான காரியமாகவே இருக்கும். மஹிந்த அணியினரை முப்பது வீதமான மக்களே ஆதரிப்பதாகத் தெரிகின்றது. ஏதோ ஒரு காரணத்துக்காக ஏனைய மக்கள் அவர்களுக்கு எதிராகவே உள்ளனர். அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஒரு அமெரிக்க பிரஜையாவார். அமெரிக்க பிரஜையாகவுள்ள ஒருவர் அந்தப் பிரஜாவுரிமையை இரத்துச் செய்யவேண்டுமானால் அதற்கான சட்டதிட்டங்கள் உள்ளன. அவ்வாறான நிலையில் அந்த சட்டதிட்டங்களில் அமெரிக்க அதிகாரிகள் தலையிட முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணையினை நடத்தக்கோரும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் பிரேரணை முழுமையாக நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.