குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
திருடபட்ட ஆட்டை இணையத்தளம் மூலம் விளம்பரப்படுத்தி விற்பனை செய்ய முயற்சித்த மூவரை அச்சுவேலி காவற்துறையினர் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். அது குறித்து மேலும் தெரியவருவதாது ,
அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கடந்த மாதம் மூன்று ஆடுகள் திருடப்பட்டு உள்ளன. அது தொடர்பில் ஆட்டின் உரிமையாளரால் அச்சுவேலி காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆடுகள் விற்பனைக்கு உண்டு என ஆட்டின் படங்களை பதிவேற்றி இணையத்தளம் ஒன்றில் விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது. அதனை அவதானித்த ஆட்டின் உரிமையாளர் குறித்த ஆடுகள் தன்னிடம் இருந்து திருடப்பட்டவை என்பதனை உறுதி செய்து அச்சுவேலி காவற்துறையினருக்கு தகவல் வழங்கினார்.
தகவலின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த அச்சுவேலி காவற்துறையினர், ஆடுகள் விற்பனைக்கு உண்டு என விளம்பரப்படுத்தியவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தினார்கள்.
அதன் போது குறித்த நபர் , தான் பிறிதொரு நபரிடமே ஆடுகளை 25 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியதாக தெரிவித்தார். அதன் பிரகாரம் ஆட்டினை விற்பனை செய்த நபரை காவற்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது , தானும் பிரிதொருவருமாக இணைந்து அச்சுவேலி பகுதியில் ஆட்டினை திருடி மோட்டார் சைக்கிளில் அதனை வல்லை சந்தி வரைக்கும் கொண்டு சென்று , அங்கிருந்து முச்சக்கர வண்டியில் ஏற்றி நெல்லியடி பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்ததாகவும் , தெரிவித்தார்.அதனை தொடர்ந்து அவருடன் திருட சென்ற மற்றைய நபரையும் காவற்துறையினர் கைது செய்தனர்.
திருடப்பட்ட ஆடுகளை வாங்கிய நபர் மற்றும் ஆடுகளை திருடிய இருவர் என மூவரையும் காவற்துறையினர் கைது செய்து தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.