பீகாரில் உள்ள குழந்தைகள் நல காப்பகம் ஒன்றில் 40 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதும், ஒரு பெண் கொல்லப்பட்டு காப்பக வளாகத்தில் புதைக்கப்பட்டமை குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முசாபர்பூரில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் இந்த குழந்தைகள் நல காப்பகத்தில், மும்பையை சேர்ந்த சமூக அறிவியல் நிறுவனம் கடந்த ஒரு மாதமாக மேற்கொண்ட ஆய்வின் போது அங்கு நடக்கும் பலாத்கார சம்பவங்கள் குறிதது எவ்வித முறைப்பாடுகளும் சொல்லப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் கடந்த திங்கட்;கிழமை முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில், பாலியல் பலாத்காரம் குறித்த முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.குறிப்பாக காப்பகத்துக்கு நன்கொடை அளிப்பவர்களால், 7 வயது முதல் 17 வயது வரையிலான உங்கள் சகோதரிகள், பிள்ளைகள் என பலர் பல மாதங்களாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை நினைத்து பாருங்கள்.
பீகாரில் ஏராளமான பலாத்கார சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால் இதற்கு அரசு நடவடிக்கை ஏதும் அளிக்காமல் மௌனம் காக்கிறது. அவர்களுக்கு பதவிதான் முக்கியம் என பதிவிட்டிருந்தார். மேலும் காப்பகத்தை நடத்தும் தன்னார்வநிறுவனத்தின் உரிமையாளர் முதல்வர் நிதிஷ்குமாருக்கு நெருக்கமானவர் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறார் என்றும் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியதையடுத்து காப்பகத்துக்கு காவற்துறையினர் சென்று விசாரணை மேற்கொண்டதில் அந்த காப்பகத்தில் இருந்த 40-க்கும் மேற்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்துள்ளனர் எனவும் ஒரு பெண்ணை கொலை செய்து இதே வளாகத்தில் புதைத்தும் உள்ளனர் எனவும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.