பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை தொடர்பான விவகாரத்தில் இந்திய அரசியலமைப்பின் சட்டப்படி நியாயமான முறையில் உரிய முடிவு எடுக்கப்படும் என தமிழக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. அத்துடன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தேவையான ஆலோசனைகள் நடத்த வேண்டியுள்ளது என்றும் ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ளது.
ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பில் ஆளுநர் அலுவலகத்தால் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழக அமைச்சரவையின் பரிந்துரை அறிக்கை 14ஆம் திகதியே தமிழக ஆளுநருக்கு கிடைத்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரை அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. எனினும் அச் குறித்த செய்தியை ஆளுநர் அலுவலகம் முற்றாக மறுத்துள்ளது. தாம் அவ்வாறு எந்த பரிந்துரை அறிக்கையையும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பவில்லை என்றும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது