தாய்லாந்து நாட்டின் பிரதமர் பதவிக்கான தேர்தலில் அந்நாட்டின் இளவரசியை போட்டியிட அனுமதிக்க வேண்டாமென அந்நாட்டின் மன்னர் வஜிரலங்கோர்ன் தடை விதித்துள்ளார். தாய்லாந்து நாட்டில் 1932 ஆம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னர், அங்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி கவிழ்க்கப்பட்டு இராணுவம் ஆட்சிபீடத்தினை கைப்பற்றுவதும் வழமையாக நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் யிங்லக் ஷினவத்ரா , அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பதவி விலக்கப்பட்டதனைத் தொடர்ந்து இடைக்கால பிரதமராக வர்த்தக அமைச்சர் நிவாட்டம்ராங் பூன்சாங் நியமிக்கப்பட்டதனை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களையடுத்து , அந்நாட்டின் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
இந்த நிலையில், பொதுத்தேர்தலை நடத்தும்படி கடந்த மாதம் மன்னர் மகா வஜிரலங்கோர்ன் ஆணை பிறப்பித்ததனைத் தொடர்ந்தது , 500 உறுப்பினர்களைக் கொண்ட தாய்லாந்து பாராளுமன்றத்திற்கு அடுத்த மார்ச் 24 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இத இந்தப் பொட்டியில் தாய்லாந்து இளவரசி உபோல்ரத்தனா பிரதமர் பதவிக்காக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். எனினும் இளவரசி உபோல்ரத்தனா பிரதமர் பதவிக்கு போட்டியிடக்கூடாது என தாய்லாந்து மக்கள் பாதுகாப்பு கட்சிக்கு மன்னர் உத்தரவிட்டுள்ளார்.
மன்னரின் உத்தரவுக்கு மதிப்பளித்தும், அரண்மனைக்கு விசுவாசமாகவும் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இளவரசி உபோல்ரத்தனா திரும்பப் பெறப்படுவதாக தாய்லாந்து மக்கள் பாதுகாப்பு கட்சி அறிவித்துள்ளது.
தாய்லாந்தில் மன்னர் குடும்பத்தின் பெண்கள் பெருமளவில் பொது வெளியில் பேசப்படாத நிலையினை சில ஆண்டுகளுக்கு முன்னர் தகர்த்தெறிந்த இளவரசி உபோல்ரத்தனா மஹிடோல் அந்நாட்டின் பிரபல சினிமா நடிகையாக விளங்கினார்.
1972 ஆம் ஆண்டு அமெரிக்க பிரஜை ஒருவரை மணம் முடித்துக்கொண்ட காரணத்தால் அரச பட்டத்தைத் துறந்த இவர், 1990 ஆம் ஆண்டில் விவாகரத்துப் பெற்று மீண்டும் தாய்லாந்திற்குத் திரும்பினார்.
அரச குடும்பத்திற்கான பட்டம் அவருக்கு கிடைக்காத போதும் நாட்டு மக்கள் அவரை இராஜ மரியாதையுடன் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது