குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழில் உள்ள குடிநீர் பிரச்சனை காரணமாக பெண்கள் கருத்தரிக்கும் வீதம் குறைவடைந்து செல்வதாக வடமாகாண ஆளூநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். தனது அலுவலகத்தில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
யாழில் குடிநீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. அதனாலே நான் ஆளுனராக இருக்கும் இக்கால பகுதிக்குள் அதற்கு ஒரு தீர்வினை பெற வேண்டும் என முழு வீச்சாக நடவடிக்கைகளில் இறங்கியுள்ளேன்.
யாழில் பெண்களின் கருத்தரிப்பு வீதம் குறைவடைந்து வருகின்றது. இங்கிருந்து பலர் கருத்தரிப்புக்காக இந்தியாவிற்கு மருத்துவம் செய்வதற்காக செல்கின்றார்கள். இதற்கு குடிநீர் பிரச்சனையும் ஒரு காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.
இங்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் என விநியோகிக்கும் நீர் தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதில்லை. அதனை கண்காணிக்கும் பொறிமுறைகள் இல்லை.
இந்நிலையில் யாழில் உள்ள குடிநீர் பிரச்சனையை போக்குவது தொடர்பில் ஆறு திட்டங்களை பரிசீலிக்கின்றோம். அவற்றில் முதலாவதாகவும் முதன்மையாகவும் வடமராட்சி கிழக்கு கடல் நீரேரியில் இருந்து தண்ணீர் கொண்டு வருவது தொடர்பில் அதிக கவனம் செலுத்து கின்றோம்.
வடமராட்சி நீரேரியில் உள்ள நன்னீரை தேக்கும் முகமாக பாரிய குளம் ஒன்றினை அமைக்க திட்டமிடபட்டு உள்ளது. 21ஆம் நூற்றாண்டில் கட்டப்படும் மிக பெரிய குளம் அதுவாக தான் இருக்கும் என நினைக்கிறேன். அந்த குளத்தின் சுற்றளவு சுமார் 9 கிலோ மீற்றர் ஆகும். அதன் அணைக்கட்டுக்கள் கொங்கிரீட் போட்டே கட்டப்படவுள்ளன.
அடுத்த திட்டமாக 1956ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஆறுமுகம் திட்டத்தை தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு ‘அட்வான்ஸ் ஆறுமுக திட்டம்’ என மாற்றி அமைத்து அது தொடர்பிலும் பரிசீலினை செய்கிறோம்.
மூன்றவதாக பாலியாற்று திட்டம் உள்ளது. நான்காவதாக மேல் பறங்கியாறு கீழ் பறங்கியாறு திட்டமும் பரிசீலனையில் உள்ளது. ஐந்தாவதாக மத்திய மற்றும் சப்ரகமுவா மாகாணத்தில் இருந்து குழாய்கள் ஊடாக நீரினை கொண்டுவருவது.
ஆறாவதாகவும் , இறுதியாகவுமே இரணைமடுவில் இருந்து யாழுக்கு நீர் கொண்டுவரும் திட்டத்தை பரிசீலனைக்கு எடுக்க உள்ளோம். அந்த திட்டத்தினை தற்போது கிடப்பில் போட்டுள்ளோம் என தெரிவித்தார்