யாழ் மாவட்ட செயலக ஊழியர்கள்…
கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழ்.மாவட்ட செயலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. முதலாவது குண்டு வெடித்த காலை 8.45 மணிக்கு மாவட்ட செயலக ஊழியர்கள் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடை பிரார்த்தித்து 3 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார்கள். அதேவேளை தேசிய துக்க தினத்தை அனுஸ்டிக்கும் முகமாக மாவட்ட செயலகத்தில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
தேசிய துக்க நாளான இன்று யாழ்.மரியன்னை (பெரிய கோவில்) தேவாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது.
இவ் அஞ்சலி நிகழ்வின் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் தீபங்களை ஏற்றி அமைதி பிராத்தனை செய்ததுடன் ஆலயத்திற்குள் விசேட பிரார்த்தனையும் நடைபெற்றது.
இப்பிரார்த்தனையில் யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் , யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குருமுதல்வர்கள், பாடசாலை மாணவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
முதலாவது குண்டு வெடித்த காலை 8.45 மணிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், தேசிய துக்க நாளுக்கான தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் ஏற்றிவைத்தார். தொடர்ந்து உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தித்து 3 நிமிட மௌன அஞ்சலியையும் நீதிபதிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் செலுத்தினர்.
நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி விநாயகமூர்த்தி இராமகமலன், யாழ்ப்பாணம் நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் ஆகியோரும் மேல் நீதிமன்ற, மாவட்ட நீதிமன்ற மற்றும் நீதிவான் நீதிமன்ற உத்தியோகத்தர்களும் பங்கேற்றனர்.
கிளிநொச்சியில் தேசிய கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படடு அஞ்சலிகள் இடம்பெற்றன
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் உயிழிந்த பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அரசினால் அறிவிக்கப்பட்ட தேசிய துக்க தினம் இன்று நாடாளவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மாவட்டச் செயலகம், நிதிமன்றம், மற்றும் அரச திணைக்களங்கள் என்பவற்றில் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டும் கறுப்புக்கொடிகள் ஏற்பட்டும் உத்தியோகத்தர்களால் அஞ்சலிகளும் செலுத்தப்பட்டுள்ளது.
வடக்கிலுள்ள ஆலயங்களிலும் நாளை புதன்கிழமை காலை 8.45 மணியளவில் மணி ஒலித்து வழிபாடுகளில் ஈடுபட அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வடக்கிலுள்ள ஆலயங்களிலும் நாளை புதன்கிழமை காலை 8.45 மணியளவில் மணி ஒலித்து வழிபாடுகளில் ஈடுபட அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் யாழ்ப்பாணம் மறை மாவட்ட குருமுதல்வர் தெரிவித்ததாவது:
நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை துக்க நாள் கடைப்பிடிக்கப்படவேண்டும்.
கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் முதலாவது தாக்குதல் இடம்பெற்ற காலை 8.45 மணிக்கு புதன்கிழமை அன்று அதே நேரத்தில் ஆலயங்களில் வழிபாடுகள் முன்னெடுக்கப்படும். அந்த நேரத்தில் ஆலயங்களில் மணி ஓசையும் எழுப்பப்பட்டு 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்படவேண்டும் – என்றார்.
இதேவேளை, வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இன்று நண்பகல் மதத் தலைவர்கள், படை, பொலிஸ் அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் இந்த விடயம் கூறப்பட்டு அதனை அவர்களும் ஏற்றுக்கொண்டனர்.