குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கையை தனது கைபேசியில் ஒளிப்படம் மற்றும் காணொளி பதிவுகளை மேற்கொண்டவரை இராணுவத்தினர் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் காவல்துறையினர்; ஊடாக குறித்த நபரை விடுவித்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பூனைதொடுவாய் கடற்கரையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இனம் தெரியாத நபர்கள் சிலர் படகில் வந்து கரை இறங்கி செல்வதனை கண்ணுற்ற அப்பகுதி மீனவர்கள் அது தொடர்பில் பிரதேச செயலாளருக்கு அறிவித்தனர்.
இதனையடுத்து பிரதேச செயலர் , இராணுவம் கடற்படை மற்றும் காவல்துறையினருக்கு அறிவித்ததனையடுத்து அடுத்து அப்பகுதிக்கு சென்று; தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதன் போது அப்பகுதி மக்களும் இராணுவம் கடற்படை மற்றும் காவல்துறையினருடன் இணைந்து தேடுதல் நடத்தினார்கள்.
அதன் போது கடற்கரையில் இருந்து சற்று தொலைவில் இருந்த காட்டு பகுதிக்குள் நான்கு பொதிகளில் பொதியிடப்பட்ட நிலையில் ஒரு தொகை கேரளா கஞ்சா மீட்கப்பட்டது.
அதனை அங்கிருந்த சுண்டிக்குளம் கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவரும் , வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு செயலாளருமான செல்வராசா உதயசிவம் தனது கைபேசியில் ஒளிப்படம் மற்றும் காணொளிகளை பதிவு செய்தார்.
அதனை அவதானித்த இராணுவத்தினர் அவரது கைபேசியை பறித்ததுடன் , அவரையும் கைது செய்தனர். அவ்விடத்தில் வைத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது ஊடகவியலாளர்களுக்கு வழங்கவே ஒளிப்படம் காணொளிகளை பதிவு செய்ததாக கூறியுள்ளார்.
அதனை ஏற்க மறுத்த இராணுவத்தினர் அவரை கைது செய்து கட்டைக்காடு இராணுவ முகாமுக்கு கொண்டு சென்றனர். அங்கு சுமார் 6 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மாலை 4 மணியளவில் அவரை பளை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பளை காவல்துறையினர் இரவு 7 மணி வரையில் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , அவரை கடுமையாக எச்சரித்து விடுவித்தனர்.
#army #checking #arrest