இலங்கையின் நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவு தெரிவிப்பதாக பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. யுத்தம் முடிந்து 10 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரித்தானிய வெளிவிவகாரத்துறை அலுவலகத்தின் ஆசிய பிராந்தியத்திற்கான அமைச்சர் மார்க் ஃபீல்ட், வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவலை குறிப்பிட்டு உள்ளார்.
இலங்கையின் நீண்ட கால நட்பு நாடான பிரித்தானியா தொடர்ந்தும் நல்லிணக்கம் ஏற்படுவதற்கும் நிலைமாறுகால நீதிப் பொறிமுறையானது முறையாக இயங்குவதற்கும் ஒத்துழைப்பு வழங்கும்.
அதற்கேற்ப அமைதியான, வளமான மற்றும் நிலையான எதிர்காலத்தை கட்டியெழுப்புவது அவசியம். இலங்கையில் உள்ளக போர் முடிந்து 10 வது வருடபூர்த்தி நினைவுகூரப்படும் இந்த தருணத்தில் மோதல்களின் போது உயிர்த்தியாகம் செய்தவர்களை நினைவு கூருவதுடன், பாதிக்கப்பட்ட அனைத்து சமூகத்தினருக்குமாக பிரார்த்திப்பதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்பாகவும் பிரித்தானியாக மிகுந்த அதிர்ச்சியடைந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்போது பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த இலங்கை மக்கள் தொடர்பில் தமது அரசாங்கம் ஆழ்ந்த அனுதாபங்களை கொண்டிருப்பதாகவும். இலங்கை மக்களுடன் இந்தத் தருணத்தில் தோழமையுடன் கரங் கோர்த்திருப்பதாகவும் அமைச்சர் மார்க் ஃபீல்ட் குறிப்பிட்டார். இந்த நிலையில் இனிவரும் காலங்களில் பன்முகத் தன்மை, பல்கலாசார, பல மதங்கள் கொண்ட சமூகமாகவும், கலாசாரங்களை பேணிப் பாதுகாக்கும் கட்டமைப்பாகவும், இலங்கையை அபிவிருத்தி செய்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். #மார்க் ஃபீல்ட் #நிலைமாறுகால நீதிப் பொறிமுறை