வவுனியாவில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்த வரட்சி காரணமாக 39 குடும்பங்களைச் சேர்ந்த 105 பேர் பாதிப்படைந்துள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.தனுராஜ் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் ஏற்பட்ட வரட்சி காரணமாக வவுனியா வடக்கு மருதோடை கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமமான காஞ்சிராமோட்டை பாதிப்படைந்துள்ளது. இதன்காரணமாக இங்கு வசிக்கும் 39 குடும்பங்களைச் சேர்ந்த 105 பேர் குடிநீர் பெறுவதில் இடர்பாடுகளை எதிர்நோக்கி வந்தனர்.
இந்நிலையில் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் ஊடாக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு இம் மக்களின் குடிநீர் விநியோகத்திற்காக 78 ஆயிரத்து 500 ரூபா முதல் கட்டமாக வழங்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்தும் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இவ்வாண்டு நெற்செய்கை மற்றும் மேட்டு நிலப் பயிர்செய்கையில் வரட்சியினால் பாதிப்புக்கள் பெரியளவில் ஏற்படவில்லை என மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.