Home இலங்கை கொரோனாக் காலத்திலும் திருந்தாத மனிதர்கள்? – நிலாந்தன்…

கொரோனாக் காலத்திலும் திருந்தாத மனிதர்கள்? – நிலாந்தன்…

by admin


கொரோனாவைரஸ் ஓர் உலகப் பொதுஆபத்தாக மாறிய போது நாடுகள் தமது தேசிய எல்லைகளை மூடத் தொடங்கிக் கொண்டிருந்த ஒரு பின்னணியில் ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ஓர் அறிவிப்பைவெளியிட்டார. உலகம் முழுவதிலும் போரில் ஈடுபடும் தரப்புகள் தங்களுக்கிடையே யுத்த நிறுத்தத்துக்குப் போக வேண்டும் என்று அந்த அறிவிப்பு கேட்டிருந்தது.

ஆனால் உலகப் பேரரசான ஐக்கிய அமெரிக்கா ஏற்கெனவே ஈரானின் ஆதரவைப் பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினரின் தளங்களின் மீது தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்த ஒரு பின்னணியில்  ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் அறிவிப்பை போரில் ஈடுபடும் தரப்புக்கள் பெருமளவுக்கு பொருட்படுத்தவில்லை என்றே தோன்றியது.

உதாரணமாக இந்தியாவில் சதீஷ்கர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் போராளிகள் இந்தியதுருப்புகளின் மீதுதாக்குதல் தொடுத்துக் கிட்டத்தட்ட பத்துக்கும் குறையாத படைவீரர்களை கொன்றிருந்தார்கள. அதற்குப்பின் ஆபிரிக்காவில் நைஜீரியாவில் போகோ ஹராம் இயக்கத்தால் ஏழுபதுக்கும் குறையாத நைஜீரிய துருப்புகள் கொல்லப்பட்டார்கள். அதற்கும் சற்று பிந்தி கடந்தவாரம் தலிபான்கள் ஆப்கான் அரசதுருப்புகளின் மீதுதாக்குதலைத் தொடுத்திருந்தார்கள். ஏற்கனவே அங்குயுத்த நிறுத்தம் உண்டு. அது இந்தஆண்டில் ஒரு பெரிய அடைவாக காட்டப்பட்டது. அதனால் யுத்தநிறுத்தம் இருக்கத்தக்கதாகவே தலிபான்கள் ஆப்கான் துருப்புக்கள் மீது தாக்குதலை நடாத்திச் சிலரைக் கொன்றிருக்கிறார்கள். வடகொரியா வழமைபோல ஏவுகணைச் சோதனைகளை செய்துகொண்டிருக்கிறது.

அல்கைதாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ்சும் கொரோனா வைரஸை கடவுளின் ‘மிகச் சிறிய சிப்பாய்’என்று கருதுவதாக தெரிகிறது. அல்கொய்தாவின் ஆதரவாளர் ஒருவர் ஒண்லைன் உரையாடல்களின் போது கொரோனாவைரஸ் ஆனது ‘அல்லாவின் சிப்பாய்’ என்று வர்ணித்திருக்கிறார். இஸ்லாத்துக்கு எதிராக அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் முன்னெடுத்து வரும் போருக்குஎதிராககடவுளின் கோபம் அவர்கள் மீது திரும்பியிருக்கிறது என்ற தொனிப்பட அல்கைதாவும் ஐ.எஸ்.ஐ.எஸ்சும் கருத்து கூறியுள்ளன.செப்டம்பர் 11 தாக்குதலின் போது கொல்லப்பட்ட அமெரிக்கர்களின் மொத்தத் தொகையைவிட அதிக தொகையினர் கடந்தவாரத்தில் மட்டும் கொரோனாவைரசால் கொல்லப்பட்டிருக்கிறார்கள. எனவே அந்தவைரஸை கடவுளின் மிகச்சிறிய சிப்பாய் என்றுஅல்காய்தாவின் பிரச்சாரஏடாகிய அஸ்ஸகாப் (As-Sahab) வர்ணித்துள்ளது.

அதாவது ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கேட்டுக் கொண்டபின்னரும் கூட கொரோனா வைரஸினால் இதுவரை ஜம்பதினாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்ட பின்னரும் கூடபோரில் ஈடுபடும் தரப்புக்கள் போரை நிறுத்ததயாரில்லை. போருக்கு காரணமான பகைமையும் குறையவில்லை. ஒரு வைரசுக்கு எதிராகஉலகம் முழுவதும் போராடிக் கொண்டிருக்கும் ஒருகாலகட்டத்தில் தங்களுக்கிடையே காணப்படும் முரண்பாடுகளை தற்காலிகமாகவேனும் ஒத்தி வைத்து யுத்தநிறுத்தத்துக்கு போக பெரும்பாலான தரப்புக்கள் தயாரில்லை.

இதில் விதிவிலக்காக கொலம்பியாவில் அரசுக்கு எதிராக போராடும் அமைப்பாகிய தேசிய விடுதலை ராணுவம் (ELN) ஒருதலைப்பட்சமாக ஏப்ரல் மாதம் முழுவதுக்கும் யுத்தநிறுத்தத்தை அறிவித்திருக்கிறது. இதுமிகஅரிதான ஒரு புறநடை.

ஆனால் பொதுப் போக்கு எதுவென்று பார்த்தால் ஓர் உலகப் பேரிடரின் போதும் உள்நாட்டுப் போர்கள் நிறுத்தப்படவில்லை என்பதுதான். போர்கள் மட்டுமல்ல உலகின் பொதுவான வணிக மனோநிலை மாறவே இல்லை. ஓர் உலகப் பொதுப் பேரிடரின் போதும் வியாபாரிகள் இரங்கவில்லை. உலகம் முழுவதிலும் வர்த்தக நிலையங்களில் வரிசையாகக் காத்திருக்கும் மக்கள் வழமையைவிடக் கூடுதலான விலைகளைக் கொடுத்தே பொருட்களை வாங்க வேண்டியிருக்கிறது. அனர்த்தகாலச் சுரண்டல் உலகம் முழுவதும் ஒன்றுதான்.

பெருந் தமிழ்ப் தரப்பில் தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் கொரோனாக் காலம் விலைகளை கூட்டியிருக்கிறது. பொருட்களைப் பதுக்கியிருக்கிறது. நாட்டில்,வீட்டுக்குவரும் வியாபாரிகளில் மிகச் சிலரைத் தவிர அதிகமானவர்கள் கொள்ளைக்காரர்களாகவே தெரிகிறார்கள. எல்லாவற்றுக்கும் அறாவிலை. இலங்கை அரசாங்கம் மீன் டின்னுக்கும் பருப்புக்கும் முட்டைக்கும் விலையை குறைத்தது. அதிலிருந்து தொடங்கி நிவாரணத்துக்கு வழங்கக் கூட பருப்பைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது. எல்லாவற்றையும் பதுக்கிவிட்டார்கள்.

முட்டையை, பருப்பை, டின் மீனைஅரசாங்கம் அறிவித்திருக்கும் குறைந்த விலைக்கு விற்க எந்த ஒருவியாபாரியும் தயாரில்லை. அப்படி விற்பதால் வரும் நட்டத்தை யார் பொறுப்பது என்று கேட்கிறார்கள். அரசாங்கம் ‘சதோசா’ விற்குமட்டுமே மானியம் கொடுக்கிறது. எங்களுக்கு தரவில்லை. நாங்கள் வாங்கிய விலைக்குத்தான் பொருட்களை விற்கலாம். என்றுஅவர்கள் கூறுகிறார்கள். முட்டைகிடந்து அழுகினாலும் பரவாயில்லை என்று கருதும் வியாபாரிகளுடைய இதயத்தை கொரோனாவைரஸ் இன்னும் கரைக்கத் தொடங்கவில்லை.

இதுதான் நிலைமை. ஒருலகப் பொதுப் பேரிடர் ஆனது எல்லாவற்றையும் உடனடியாக மாற்றிவிடவில்லை. வியாபாரிகள் மட்டுமல்ல சிங்களத் தலைவர்களும் திருந்தமாட்டார்கள் என்பதைத் தான் கொரோனாவைரஸ் நிரூபித்திருக்கிறது.

உலகம் முழுவதும் சமூக இடைவெளி பற்றியும் தனிமைப்படுத்தல் பற்றியும் அச்சப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களைத் தனிமைப்படுத்தும் விதத்திலும் இன இடைவெளியை அதிகப்படுத்தும் விதத்திலும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருகுற்றவாளியான சுனில் ரத்னாயக்கவை விடுதலை செய்திருக்கிறது.

படைக் கட்டமைப்புக்கும் ராஜபக்சக்களுக்கும் இடையிலான உறவு சீமெந்தினால் கட்டப்பட்ட ஒன்று. படைத் தரப்பைத் தண்டிப்பது என்பது அதன் தர்க்கபூர்வ முடிவாக அக்குற்றங்களை செய்யுமாறு அரசியல் தீர்மானம் எடுத்த ராஜபக்சக்களை தண்டிப்பதுதான். ஏனவே ராஜபக்சக்கள் இரண்டாவது தடவை ஆட்சிக்கு வந்ததிலிருந்து படைத் தரப்பைத் தண்டிக்கப்பட முடியாத ஒருதரப்பாகக் கட்டியெழுப்ப முயற்சிக்கிறார்கள். ஏனெனில் படைத் தரப்பை தண்டனையிலிருந்து பாதுகாத்தால் அது அதன் தர்க்கபூர்வ விளைவாக ராஜபக்ச சகோதரர்களையும் தண்டனையிலிருந்து பாதுகாத்துவிடும் என்றுஅவர்கள் நம்புகிறார்கள்.

கோத்தாபய ஜனாதிபதியான பின் நாட்டின் முக்கியதிணைக்களங்களை பாதுகாப்பு அமைச்சுக்கு கீட்பட்டதாக மாற்றினார். சவேந்திரசில்வாவுக்கு எதிராக அமெரிக்கா பயணத் தடைவிதித்தது. ஆனால் ராஜபக்சக்கள் இறங்கிவரவில்லை. அமெரிக்கத் தடைக்கு எதிரான நடவடிக்கைஎன்று கூறிக்கொண்டு ஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகப் போவதாக அறிவித்தார்கள். அதுமட்டுமல்ல சிவில் கட்டமைப்புகளுக்கும் ஓய்வுபெற்ற படைப் பிரதானிகளைப் பொறுப்பாக நியமித்தார்கள். அண்மையில் கூட மேல் மாகாணத்தின் ஆளுநராக முன்னாள் வான் படைத் தளபதிநியமிக்கப் பட்டிருக்கிறார். இவ்வாறு ராஜபக்சக்கள் நாட்டைமேலும் மேலும் படைமயப்படுத்தி வந்த ஒருபின்னணியில் தான் கொரோனாத் தாக்கம் பரவியது.

இதுவிடயத்தில் கொரோனா அவர்களுக்கு விழுந்த ஒரு லொத்தர். கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் படையினரிடம் கையளித்ததன் மூலம் இறுதியிலும் இறுதியாக கொரோனாவை வெற்றி கொள்ளும் பொழுது அந்த புகழ் அனைத்தும் படைத்தரப்புக்கே சேரும். இதன் மூலம் படைத்தரப்புக்கு வெள்ளை அடிக்கலாம்.

இவ்விதமாக படைத்தரப்பைப் பாதுகாத்தல் என்ற நிகழ்ச்சிநிரலின் கீழ் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு படைவீரருக்கு கொரோனாக் காலத்தில் அரசாங்கம் மன்னிப்பு வழங்கி இருக்கிறது. தமிழ்மக்களின் கவனமும் உலகத்தின் கவனமும் ஒருவைரைசின் மீது குவிந்து இருக்க அந்தவைரஸை வெற்றிகொள்ளும் நடவடிக்கைகளில் முன்னணியில் நிற்கும் படைத் தரப்பை மகிழ்விக்கும் விதத்தில் சுனில் விடுவிக்கப் பட்டிருக்கிறார்.

இதன் மூலம் ஓர் உலகபேரிடரின் போதும் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் எதையும் கற்றுக் கொள்ளாது என்பது மறுபடியும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில் இலங்கைத்தீவு இரண்டுஉலகப் பொதுப் பேரிடர்களை சந்தித்திருக்கிறது. முதலாவது சுனாமி. இப்பொழுது கொரோனா.

சுனாமியிலிருந்து இந்தோனேசிய அரசும் அதற்கெதிராக போராடிய அச்சேமக்களும் பெற்றுக் கொண்ட படிப்பினைகளின் விளைவே அங்கு ஏற்பட்ட சமாதான உடன்படிக்கைஆகும. ஆனால் இலங்கைத் தீவு சுனாமிப் பொதுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதில் தோல்வியுற்றது. இப்பொழுதும் கொரோனாத் தாக்கத்திலிருந்து அவர்கள் எதையும் கற்றுக் கொள்ளத் தயாரில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் கொரோனாவுக்குப் பின்னரான இலங்கைதீவில் பெரும்பாலும் படைத் தரப்பைக் கொண்டாடும் ஓர் அரசியலே கோலோச்சும். அதாவது போர்க் குற்றங்களை மறைக்கின்ற,போர்க் குற்றவாளிகளை மன்னிக்கின்ற ஓர் அரசியல் சூழல். இதை இன்னும் கூர்மையாக சொன்னால் தமிழ் மக்களுக்குப் பொறுப்புக் கூறத் தயாரற்ற ஓர் அரசியல் சூழல். சுனில் ரட்நாயக்காவிற்கு வழங்கப்படட மன்னிப்பு கொரோனாவுக்குப் பின்னரானஅந்தஅரசியலுக்குக் கட்டியம் கூறுகிறதா?

‘கோவிட-19 உம் இனவாதமும் சாவுக்கேயான தொற்றுநோய்கள். அவற்றைப் பற்றிப்பிடிக்கக் கூடியவர்களை அவைத் தொற்றிக் கொள்ளும். நாங்கள் அவற்றில் ஒன்று பரவக் கூடிய வழிகளைப் பூட்டிவிட்டோம். ஆனால் முரண்பாடான விதத்தில் மற்றொன்று பெருக்கெடுத்தோடும் வழிகளைத் திறந்துவிட்டுள்ளோம்’ என்று அண்மையில் கரு ஜயசூரிய கூறியிருக்கிறார். அப்படியென்றால் தெருக்களை மூடி கிராமங்களை மூடி நகரங்களைமூடி மாவட்டங்களை மூடி கொரோனாவை வெற்றிகொண்ட பின்னரும் நாடு பெருக்கெடுத்தோடும் இனவாதத்தால் இறுதியிலும் இறுதியாகத்தோற்கடிக்கப்பட்டுவிடுமா?

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More