பாடசாலையில் இருந்தே பல்கலைக்கழக
நுழைவுக்கான அறிவுரைகள் அனைத்தும்,
ஆசிரியர்களால் வழமை போல வழங்கப்பட,
அவர்கள் போதனைகளை
சாதனையாக்கும் முயற்சிதான்
என்னுடனான என் நண்பர்களின்
சிறப்பான பரீட்சை பேறுகள்.
கண்ணில் பல கனவுகளுடனும்,
நெஞ்சில் சில எதிர்பார்ப்புகளுடனும்,
குறைந்தது நான்கு ஆண்டுகளிலாவது
குறை ஏதும் பாடத்தில் வைக்காமல்
முடித்து விடும் எண்ணத்தில் தொடங்கியது
எங்கள் பல்கலை வாழ்க்கை.
கறுப்பு வெள்ளை ஆடைகள்
எங்கள் சீருடையானது.
ஆண் நட்பின் சிகையலங்காரம் எல்லாம்
ஆலய நேர்த்தி நிறைவேறியதை நினைவூட்ட,
பெண் தோழமைகளின் இரட்டை பின்னலோ
பாடசாலை பருவத்தை மீண்டும் புதுப்பித்தது.
என்னுள் மீண்டும் புதுப்பித்து பதிப்பித்தது.
அன்றைய நாட்களில்,
பல்கலையின் முதலாம் வகுப்பு நாங்கள்
எங்கள் பாதணிகளின் தரம் அப்படியே
பறைசாற்றியிருந்தது.
சிரேஸ்ட மாணவர்களுக்கான – எங்கள்
முகஸ்துதியே வாய்ப்பாடாய் மாறி போயிருந்தது.
ஆரம்பத்தில் காரணமின்றிய விடுமுறைகள்
தேனாய் இனிக்க,
அதுவே அடிக்கடி நிகழ்கையில்
தானாய் எங்கள் நிலை உணர்ந்தோம்!
வருடம் ஒன்று முடிவதற்குள்,
பாதி அரையாண்டு
உதவாக் காரணங்களாலும்,
மீதி அரையாண்டு
கரைபுரளும் வெள்ளத்திலும்;
உருண்டோடியது.
விடுமுறைக்கான காரணங்களை
வீட்டாருடன் கூறி முடிப்பதற்குள்ளேயே
அவர்கள் புலம்பல் ஆரம்பமாகிவிடும்.
பட்டம் கிடைத்ததுமே பதவியும்
கைகிட்டிடும் எண்ணம் – அவர்களுக்கு
இன்றைய தொழிற்சந்தை நிலவரங்கள்
கலைப்பட்டதாரிகளுக்கு பதவி வழங்கும்
அளவிற்கு தகுதி ஏதும் இல்லை
என்பதாக குற்றஞ்சாட்டிட,
அதையே,
நிரூபிப்பதாய் நிலையாய் போனது
அவர்களின் இல்லத்துடனான இருப்பும்.
ஆனாலும்,
கல்வி வளர்ச்சியை காட்டுவதாய்,
வருடம் தோறும்
குறையாமல்,
பல்கலை நுழைவிற்கான மாணவர்
தேர்வு அரங்கேறுகிறது.
இங்கு குறைவின்றி
நிறைவாய் கிடைத்தது என்றும்
மன(ண)ம் மாறாத என் தோழமைகளின்
நட்(பூ) மட்டுமே
பட்டம் பெற்று பல வருடங்களான – எங்கள்
சிரேஸ்ட நண்பர்களுக்கே நியமனம்
இல்லாத நிலையில்,
வெளியேற்றுப்படலம்
இடம்பெற இன்னும் ஐந்தாறு ஆண்டுகள்
செல்லும் என்கிறது கலநிலவரம்.
எங்கள் நிலையோ
கையறுந்த நிலையில்.
திசையறியா
செல்லும் பட்டம் போல்
காலம் தாழ்த்திய
எங்களுக்கான பட்டங்களும்
திசையறியா
எதிர்காலம் நோக்கிய நகர்தலே……
ஆக்கம்- ஜனந்தினி சுப்பிரமணியம்.