இலங்கை பிரதான செய்திகள்

நாடாளுமன்றத்தில் விடுதலைப் புலிகள், பிரபாகரன் குறித்து பேச தடை – அரசு திட்டம்!

இலங்கை நாடாளுமன்றத்திலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்க முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளாா்

பிபிசி தமிழுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளாா்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயரிய நாடாளுமன்ற சபையில் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை புகழ்ந்து பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என சரத் வீரசேகர கூறியுள்ளார்.

ஜெர்மன் நாடாளுமன்றத்தில் நாசிசவாதம் தொடர்பிலோ அல்லது ஹிட்லர் தொடர்பிலோ பேச முடியாது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளாா்.

அதேபோன்று, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் என்பவர், லட்சக்கணக்கான மக்களை கொலை செய்த ஒருவர் எனவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு எனவும் அதனால், இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையோ அல்லது வேலுப்பிள்ளை பிரபாகரனையோ புகழ்ந்து பேசுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

அதனால், நாடாளுமன்றத்திற்குள் விடுதலைப் புலிகளையோ அல்லது அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையோ புகழ்ந்து பேசுவதற்கு எதிரான சட்டமூலமொன்றை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்து வருவதாக என சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளாா்

மேலும் தன்னால் கொண்டு வரப்படும் சட்டமூலத்திற்கு எவ்வாறான பதில் கிடைக்கும் என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இதேவேளை சரத் வீரசேகரவின் கருத்துக்கு, தமிழ் தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுமக்களை கொலை செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் பொது மக்களை கொலை செய்தார்கள் என்பது, ஆதரமற்ற ஒரு போலியான குற்றச்சாட்டு எனவும் அமைச்சர் சரத் வீரசேகர, மோசமான இனவெறி சிந்தனைக்குள் புதைந்துள்ளதாகவும், அதனாலேயே அவர் இவ்வாறான கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுட்டுள்ளாா்.

இலங்கையில் 30 வருட காலம் இடம்பெற்ற யுத்தத்தின் போது, தமிழர்கள் மீது, இலங்கையின் முப்படைகளே தாக்குதல்களை நடத்தியதாகவும் இலங்கை அரச படைகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாகவும், அதனை சரத் வீரசேகரவும் எதிர்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுட்டுள்ளாா்.

தமிழ் மக்களுக்காக போராடிய விடுதலைப் புலிகளை நினைவு கூர்வதை தடுப்பதற்கும், தமிழ் மக்களின் உரிமை கோரிக்கைகளை நசுக்குவதற்காகவுமே, சரத் வீரசேகர இவ்வாறான திட்டமொன்றை முன்னெடுத்து வருவதாகவும் இதுவொரு முழுமையாக ஜனநாயக விரோத செயற்பாடு எனவும் அவ்வாறான சட்டமூலம் கொண்டு வரப்படும் பட்சத்தில் அதற்கு எதிராக தாம் செயற்படுவதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இவ்வாறான செயற்பாடொன்றை இலங்கை அரசாங்கம் செய்யும் பட்சத்தில், சர்வதேசத்திற்கு முன்பாக தொடர்ந்தும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் செல்வராசா கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளாா். #நாடாளுமன்றத்தில் #விடுதலைப்புலிகள் #பிரபாகரன் #தடை #சரத்வீரசேகர #கஜேந்திரன்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.