Home உலகம் அமெரிக்க நாடாளுமன்ற, கபிட்டல் அருகே தாக்குதல்: காவற்துறை அதிகாரி பலி!

அமெரிக்க நாடாளுமன்ற, கபிட்டல் அருகே தாக்குதல்: காவற்துறை அதிகாரி பலி!

by admin

அமெரிக்க நாடாளுமன்றம் இருக்கும் கபிட்டல் கட்டடத்தின் அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு காவற்துறை அதிகாரி உயிரிழந்தார். இன்னொருவர் காயமடைந்தார்.

வாஷிங்டன் டிசியில் இருக்கும் இந்தக் கட்டடத்தின் பாதுகாப்பு தடுப்புகளை மோதிக்கொண்டு ஒரு கார் உள்ளே சென்றது. இதன் பின் அதன் ஓட்டுநர் அங்கு இருந்த காவற்துறை அதிகாரி மீது கத்தியோடு பாய்ந்தார். காவற்துறை அதிகாரி துப்பாக்கியால் சுட்டதில் அந்த சந்தேக நபர் உயிரிழந்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு, தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து சான்றளிக்கும் பணியில் நாடாளுமன்றம் ஈடுபட்டிருந்தபோது ஜனவரி மாதம் இந்த கட்டடத்துக்குள் புகுந்து டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டது நினைவிருக்கலாம். அதன் பிறகு நடந்திருக்கும் இந்த தாக்குதல் பயங்கரவாதம் தொடர்புடையதாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சட்ட அமலாக்கத் துறை மீதோ, வேறு எவர் மீதோ இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்தாலும், இதன் பின்னணியை ஆராய்ந்து அதன் அடியாழத்துக்குச் செல்லவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதை செய்வோம் என்று வாஷிங்டன் டிசி மெட்ரோபாலிடன் காவற்துறையின் தற்காலிகத் தலைவர் ராபர்ட் கான்டீ தெரிவித்துள்ளார்.

“நமது அலுவலர்களில் ஒருவர் இறந்துவிட்டார் என்று கனத்த இதயத்தோடு அறிவிக்கிறேன்” என கபிட்டல் காவற்துறை படையின் தற்காலிகத் தலைவர் யோகானந்த பிட்மன் தெரிவித்தார். அந்த அதிகாரியின் பெயர் வில்லியம் பில்லி இவான்ஸ் என்று அவர் அறிவித்தார்.

தாக்குதலில் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி வில்லியம் பில்லி இவான்ஸ்
படக்குறிப்பு,தாக்குதலில் கொல்லப்பட்ட காவற்துறை அதிகாரி வில்லியம் பில்லி இவான்ஸ்

தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர் இந்தியானா மாகாணத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நோவா கிரீன் என்று புலனாய்வில் ஈடுபட்டுள்ள சட்ட அமலாக்கத் துறையினர் கூறியதாக பிபிசியின் நட்பு நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் கூறுகிறது.

அவரைப் பற்றி காவற்துறை துறை தரவுகளில் முன்கூட்டி தகவல் ஏதுமில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

முகநூலில் அவர் என்ன எழுதியிருந்தார்?

நோவா கிரீன் ஒரு முகநூல் கணக்கு வைத்திருந்தார். அது தற்போது அழிக்கப்பட்டிருக்கிறது. அழிக்கப்பட்ட அந்தப் பக்கத்தில், மார்ச் மாத நடுவில் அவர் ஒரு பதிவு எழுதியிருந்தார். அந்தப் பதிவில், தாம் சமீபத்தில் ஒரு வேலையை விட்டு விலகியதாக குறிப்பிட்டிருந்தார். அதற்கு “ஓரளவு, வேதனைகள் காரணம். ஆனால், முக்கியமாக ஆன்மிகப் பயணத்தைத் தேடி” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். “தெரியாமல் நான் எடுத்துக்கொண்டிருந்த போதைப் பொருளின் பக்கவிளைவுகளால்” தாம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ‘நேஷன் ஆஃப் இஸ்லாம்’ என்ற கருப்பின தேசியவாத மதவாத இயக்கத்தின் மீது தமக்குள்ள ஈடுபாடு குறித்து அவர் விரிவாக எழுதியிருந்தார்.

கேபிடல் போலீசாரும், நேஷனல் கார்டு ட்ரூப்ஸ் படையினரும்.
படக்குறிப்பு,கேபிடல் போலீசாரும், நேஷனல் கார்டு ட்ரூப்ஸ் படையினரும்.

அந்த முகநூல் பக்கம் கிரீனுக்கு சொந்தமானதுதான் என்பதை முகநூல் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிபிசியிடம் உறுதிப்படுத்தினார்.

இந்த சம்பவத்தை அடுத்து கபிட்டல் கட்டத்தில் காவற்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றக் கூட்டம் தற்போது நடைபெறவில்லை என்பதால் அரசியல் தலைவர்கள் பெரும்பாலானோர் தாக்குதல் நடந்தபோது கட்டடத்தில் இல்லை.

தாக்குதல் பற்றி நமக்குத் தெரிந்தது என்ன?

உள்ளூர் நேரப்படி பகல் 1 மணி அளவில், கபிட்டல் காவற்துறை எச்சரிக்கை அமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியது. அதில், அச்சுறுத்தல் காரணமாக, வெளிப்பக்க ஜன்னல், கதவுகளில் இருந்து தள்ளி இருக்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. வெளிப்புறங்களில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

Car crashed into a security barrier at US Capitol, 2 April 2021

வடபுறத்தில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளின் அருகே நின்றிருந்த இரண்டு காவற்துறை அதிகாரிகள் மீது நீல நிற கார் ஒன்று மோதிய நிலையில் இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அப்போது அந்த வண்டியை ஒட்டிக்கொண்டுவந்த நபர் காரில் இருந்து வெளியேறி காவற்துறை அதிகாரிகளை நோக்கி ஓடினார். இரு அதிகாரிகளில் ஒருவர் தமது துப்பாக்கியை எடுத்து அந்த நபரை நோக்கி சுட்டார். ஒரு காவற்துறை அதிகாரி ஆம்புலன்சிலும், இன்னொருவர் காவற்துறை வண்டியிலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அந்த சம்பவம் தொடர்பாக வெளியான காணொளியில், ஒரு ஹெலிகாப்டர் பறக்கிறது. ஸ்டெரச்சரில் இருக்கும் இருவர் வண்டிகளில் ஏற்றப்படுவது போலத் தெரியும் காட்சி அதில் இருக்கிறது.

வேடிக்கை பார்ப்பவர்கள் அந்த இடத்தை விட்டு அகல வேண்டும் என்று கூறப்படுகின்றனர். எஃப்.பி.ஐ. எனப்படும் அமெரிக்க கூட்டாட்சி புலனாய்வு நிறுவனத்தின் வாஷிங்டன் கள அலுவலகம், கபிட்டல் காவற்துறைக்கு உதவி செய்யப்போவதாக அறிவித்தது.

ஜனவரியில் நடந்த கேபிடல் கலவரம் – என்ன நடந்தது?

அமெரிக்க நாடாளுமன்ற செனட் அவையில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை அதிபராக தேர்வு செய்து சான்றளிக்கும் நடைமுறைக்காக, மக்கள் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை உறுப்பினர்களின் கூட்டுக்கூட்டம் கப்பிட்டல் கட்டடத்தில் கடந்த ஜனவரி 6-ம் தேதி தொடங்கியது.

அந்த நடைமுறைகளை குலைக்கும் வகையில், டிரம்பின் ஆதரவாளர்கள், நாடாளுமன்ற கட்டடத்துக்குள் ஆயிரக்கணக்கில் திரண்டு சூறையாடினார்கள். அங்கிருந்த காவல்துறையினரால் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை.

இந்த நிலையில், மக்கள் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி மற்றும் எம்.பி.க்கள் அறை, அரங்குகள் ஆகியவற்றுக்குள்ளும் அவர்கள் புகுந்து பொருட்களை உடைத்தனர்.

இதையடுத்து அமெரிக்க பாதுகாப்பு படையினர், காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படை வீரர்கள் ஆயிரக்கணக்கில் அங்கு குவிக்கப்பட்டனர். அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர சுமார் நான்கு மணி நேரம் வீரர்களுக்கு தேவைப்பட்டது. இந்தக் கலவரத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BBC

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More