நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினருக்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்து மோதல் இடம்பெற்றது.
நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் மயூரன் தலைமையில் இன்றைய தினம் இடம்பெற்றது. அதன் போது, யாழ்ப்பாணம் – அரியாலை கிழக்கு, மயானத்தில் உக்காத கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பில் விவாதிக்கப்பட்டது
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் செ.சிவலோசன் குறித்த விடயம் தொடர்பில் உரையாற்றும்போது, குறித்த மயானத்தினை அபிவிருத்தி செய்யும் நோக்கத்திலேயே உக்கக் கூடிய கழிவுகளை கொட்டி மயான பகுதியினை உயர்த்தும் முகமாகவே சபையினால் உக்கக் கூடிய கழிவுகள் கொட்டப்பட்டது
எனினும் நல்லூர் பிரதேச சபையை சேர்ந்த சில கட்சிகளின் உறுப்பினர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அந்த இடத்திற்கு சென்று மக்களை குழப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமக்கு தவிசாளர் பதவி கிடைக்காத பட்சத்தில் இவ்வாறு குழப்பும் செயற்பாட்டில் ஈடுபடுகிறார்கள். கடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சிக்காலத்தில் நல்லூர் பிரதேச சபையினரால் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட வில்லை. தற்பொழுது த.மயூரன் தவிசாளராக பொறுப்பேற்ற பின்னர் பிரதேச மட்டங்களில் அபிவிருத்தி செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.
அதனை விரும்பாத சில கட்சிகளின் உறுப்பினர்கள் அதனை கெடுக்கும் முகமாக மக்களை தூண்டிவிட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சி யில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த மயானத்தினை அபிவிருத்தி செய்யும் முகமாக உக்ககூடிய கழிவுகளை மாத்திரமே அந்த இடத்தில் கொட்டுவதற்கு சபையின் அனுமதியுடன் அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது
எனவே சில உறுப்பினர்களின் கீழ்த்தரமான அரசியல் செயற்பாட்டின் காரணமாகவே அந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. எனினும் அந்த வட்டார மக்கள் அந்த போராட்டத்தில் ஈடுபடவில்லை வேறு இடத்தை சேர்ந்த மக்களே அந்த இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னைய ஆட்சிக்காலத்தில் அரியாலையில் நாய் சரணாலயம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் அந்த நாய் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.அதனைப்பற்றி கதைக்காத நபர்கள் தற்பொழுது மக்களை தூண்டிவிட்டு அரசியல் செய்ய முனைகிறார்கள்.
கடந்த தமிழ் தேசிய கூட்மைப்பின் தவிசாளரின் ஆட்சிக்காலத்தில் பல்வேறுபட்ட ஊழல் செயற்பாடுகள் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட்டிருந்தது.
எனினும் தற்போது மயூரன் தவிசாளராக பொறுப்பேற்ற பின்னர் மக்களுக்கு விரோதமான செயற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை என சிவலோசன் குறிப்பிட்டிருந்தார்
இதற்கு பதிலளித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் தாம் அவ்வாறான கீழ்த்தரமான செயற்பாட்டில் ஈடுபடுவது இல்லை எனவும் ஒரு சில கட்சிகளின் உறுப்பினர்கள் அவ்வாறு இருந்தாலும் தாங்கள் அவ்வாறு அரசியல் செய்யவில்லை என தெரிவித்தார்.
அதனை அடுத்து உறுப்பினர்களுக்கு இடையில் கருத்து மோதல் ஏற்பட்டு சபையில் அமைதியின்மை ஏற்பட்டது