மலையகத் தமிழர்களின் இன்றைய நிலை என்ன?
யார் இந்த மலையகத் தமிழர்கள்? என்ற கேள்வியுடன் எனது கட்டுரையினை எழுதுவதற்கு ஆரம்பிக்கின்றேன்.
1820 – 1840 காலப்பகுதியில் இந்தியாவின் தென்மாநிலத்தில் சாதிக்கொடுமையும், பஞ்சமும் தலைவிரித்தாடியது. பலர் பட்டினியால் செத்து மடிந்தனர். இச்சூழலை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஆங்கிலேயர்கள், அங்குவாழ்ந்த அப்பாவி மக்களை கூலித்தொழிலாளர்களாக கண்டி சீமைக்கு (இலங்கைக்கு) அழைத்துவந்தனர். 1815ஆம் ஆண்டு கண்டி இராஜ்ஜியத்தை பிரித்தானியர் கைப்பற்றிய பின்னர் மலையகமெங்கும் வெள்ளையர்களின் ஆதிக்கம் கோலோச்சியது. 1820 ஆம் ஆண்டில் கோப்பி பயிர்ச்செய்கை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதைய பேராதனை பூங்கா அமைந்துள்ள பகுதியிலேயே முதன்முதலாக கோப்பி (காஃபி) பயிரிடப்பட்டது. பின்னர் அது கம்பளை வரை விரிவுபடுத்தப்பட்டது.
1867இல் ஒருவகையான நோய்காரணமாக கோப்பி பயிர்செய்கை பெரும் பாதிப்புக்குள்ளானது. இதையடுத்து ஜேம்ஸ் டெய்லர் என்பவரால் நூல் கந்துர எனும் இடத்தில் தேயிலை பயிர்செய்கை ஆரம்பிக்கப்பட்டது. மலையக பிரதேசங்களில் பெருந்தோட்ட வர்த்தக பயிர்ச் செய்கையை (தேயிலை, ரப்பர்) மேற்கொள்ள மனித வளம் கிடைக்காததால், தென் இந்தியாவில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டனர். இவ்வாறு வலிசுமந்த பயணம் மேற்கொண்டவர்கள் மலைப்பாங்கான பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டதால் – மலையகத் தமிழர் என்றும், இந்திய வம்சாவளித் தமிழர் என்றும் அடையாளப்படுத்தப்பட்டனர். காடுமேடாகவும், கல்லுமுள்ளாகவும் காட்சியளித்த மலைநாட்டை – தமது கடின உழைப்பால் எழில்கொஞ்சும் பூமியாக மாற்றியதுடன், இலங்கையின் பொருளாதாரத்தையும் தோளில் சுமந்தனர். ஆனாலும், அவர்கள் வசிப்பதற்கு அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையில் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட லயன் அறைகளிலேயே பல தசாப்தங்களை கடந்தனர். இன்றைய 21 ஆம் நூற்றாண்டிலும் இந்நிலைமை முழுமையாக மாறவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
கவ்வாத்து வெட்டப்படுவதுபோல் இலங்கையின் வரலாற்றிலிருந்து வெட்டப்பட்டு, வஞ்சிக்கப்பட்ட – தோட்டப் புறங்களில் வாழ்ந்த இந்திய சமுதாயத்தினருக்கு குடியுரிமை, வாக்குரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கு பெரும் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையினையே தற்காலத்தில் எம் மக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கைத் தரத்தில் பின்தங்கிய மலையக சமூகம் அதாவது வாழ்க்கை தரத்தினை எடுத்துப் பார்க்கும் போது
நேர,காலம் பாராது கடின உழைப்பின் மூலம் இலங்கையின் பொருளாதாரத்துக்கு அவர்கள் உரமூட்டினார்கள். இருந்தும் கைக்கூலிகள் என்ற கண்ணோட்டம் மாறவில்லை. நாட்சம்பளம் பெறும்தொழிலாளர்களாகவே நாட்களை நகர்த்துகின்றனர். கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வீட்டு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டன. மலையக மக்களின் வாழ்க்கைத் தரம் நாட்டின் ஏனைய பொது மக்களது வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிடுகையில் கீழ்மட்டத்திலேயே இருந்து வருகிறது.
தேயிலை தோட்டங்களில் எழுச்சியடைந்து வரும் நெருக்கடியும் மலையக சமூகத்தின் மீது அது ஏற்படுத்தும் தாக்கம் என்ற வகையில் இதனை பார்க்கும் போது பெருந்தோட்ட முகாமைத்துவத்தினாலும், அரசுக்குச் சொந்தமான (மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் போன்ற) கம்பனிகளினாலும் மற்றும் அரச நிறுவனங்களாலும் நலன்புரிச் சேவைகள் (உதாரணமாக, சமுர்த்தி போன்ற) சமூகப் பாதுகாப்பு பயன்கள் மற்றும் ஏனைய பொருள்சார் ஆதாயங்கள் என்பவற்றை வழங்குவதில் இப்பிரிவினர் புறமொதுக்கப்பட்டு வரும் விடயம் அவதானிக்கப்பட்டுள்ளது.
கொவிட் பரவலையடுத்து கொழும்பிலிருந்து தோட்டங்களுக்கு திரும்பி வந்திருக்கும் இளைஞர்கள் கைவிடப்பட்டிருக்கும் காணிகளை தமது வாழ்வாதாரங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்கென தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்கள். ஆனால், அத்தகைய முயற்சிகள் அனைத்தும் தோட்ட முகாமைத்துவத்தினால் திட்டமிட்ட விதத்தில் முறியடிக்கப்பட்டு வந்துள்ளன. நாட்டின் பெருந்தோட்ட அமைப்பின் வகைப்படுத்தலின் கீழ் வரும் ஏனைய தோட்டங்களிலும் இந்த நிலைமை பொதுவாக நிலவி வருகின்றது. தோட்டங்களின் மோசமான முகாமைத்துவம் காரணமாக தொழிலாளர்களுக்கு வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டு வருகின்றது. எனவே, அதிகரித்து
வாழ்க்கைச் செலவு மற்றும் ஏனைய வடிவங்களிலான பொருளாதார மற்றும் சமூக அழுத்தங்கள் என்பவற்றின் காரணமாக அவர்களால் தொடர்ந்தும் இந்தத் துறை மீது தங்கியிருக்க முடியாதுள்ளது. தோட்ட வேலையிலிருந்து அவர்களுக்கு கிடைக்கும் வருமானம் தமது மாதாந்த செலவுகளை ஈடு செய்து கொள்வதற்கு போதியதாக இல்லாதிருந்து வருவதே இதற்கான பிரதான காரணமாகும். இப்பொழுது அவர்கள் முகக் கவசம் சனிடைசர், ஒன்லைன் கல்விக்கான கையடக்கத் தொலைபேசி இன்டர்நெட் வசதி என்பவற்றுக்கென மேலதிக பணத் தொகைகளை செலவிட வேண்டியுள்ளது. பெருந்தொற்று காலப் பிரிவின் போது தொழிலாளர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவிகள் என்பவற்றை வழங்குவதற்கு முகாமைத்துவம் முன்வரவில்லை.
மாதமொன்றுக்கு சராசரியாக 16 நாட்கள் வேலை கிடைத்த போதிலும் அவர்களுக்கு கிடைக்கும் சம்பளம் 12,000 ரூபாவுக்கு மேல் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அநேகமாக இல்லை என்றே கூற வேண்டும். இதன் காரணமாக அவர்கள் தமது வறுமையை போக்கிக் கொள்வதற்காகவும், ஏனைய நாளாந்த தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் வாழ்வாதாரங்களை தேடி வெளியிடங்களுக்குச் செல்லும் ஒரு நிலைமை தோன்றியுள்ளது. சொந்தமான இந்தத் தோட்டங்களில் வசித்து வரும் பிள்ளைகளை பொறுத்தவரையில் பாடசாலை இடைவிலகல் முக்கியமான ஒரு பிரச்சினையாக இருந்து வருகின்றது என்ற விடயத்தையும் இங்கு குறிப்பிடுதல் வேண்டும். இவ்வாறான இடைவிலகல் பாடசாலைகளில் சரியான கணக்கெடுப்புகள் இல்லாத காரணத்தால் பிள்ளைகள் சிறு வயதிலே வேலைக்கு அமர்த்தப்படுவதும் குறிப்பிடத்தக்க விடயம் ஒன்றாகும்.
மலையக மக்களின் தொழில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பற்றி குறிப்பிடும் போது
தொழில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என்பன ஒட்டுமொத்த பெருந் தோட்டத் துறையும் எதிர்கொண்டு வரும் ஒரு நிர்ணயகரமான பிரச்சினையாக இருந்து வருகின்றது. எவ்வாறிருப்பினும், மோசமான பராமரிப்பு காரணமாக அரசுக்குச் சொந்தமான தோட்டங்களில் இது ஒரு அழிவுகரமான ஒரு தாக்கத்தை எடுத்து வந்திருப்பது போல் தெரிகிறது. தேயிலை தோட்டங்கள் வர வர வேலை செய்வதற்கு பாதுகாப்பற்ற இடங்களாக மாறி வருகின்றன. தோட்டங்களில் பாம்புகள், சிறுத்தைகள் மற்றும் ஏனைய பூச்சிகள் என்பவற்றையும் உள்ளடக்கிய அபாயகரமான விலங்குகள் அவதானிக்கப்பட்டுள்ளன. அவை தொழிலாளர்கள் மீது கடும் பாதிப்பை எடுத்து வர முடியும். பாம்பு கடித்தவர்கள் மற்றும்
தேன் பூச்சிகள் மற்றும் குளவிகள் என்பவற்றினால் தாக்கப்படுவது சாதாரணமாக இடம்பெறும் சம்பவங்களாக மாறிவிட்டன. ஆனால், வேலையின் போது அத்தகைய தாக்குதல்களைத் தடுப்பதற்கு அவர்களிடம் எத்தகைய பாதுகாப்பு முறைகளும் இருந்து வரவில்லை. வேலை இடத்தில் விபத்துக்கள் நடைபெறும் சந்தர்ப்பங்களில் அல்லது வேலை நிலைமைகள் காரணமாக தொழிலாளர்கள் நோய்வாய்ப்படும் சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்றும், அதன் காரணமாக தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்ய முடியாத நிலையை அது ஏற்படுத்துகின்றது.
தோட்டங்களில் நிலவிவரும் சுகாதாரப் பராமரிப்பு முறை பலவீனமான ஒரு நிலையில் இருந்து வருவதனை இது ஓரளவுக்கு எடுத்துக் காட்டுகின்றது. இத்தகைய தாக்குதல்களுக்கு இரையாகுபவர்கள் தமது வேலைகளை இழப்பது மட்டுமன்றி, தொழில் பாதுகாப்பு இல்லாதவர்களாகவும் இருந்து வருகின்றார்கள்.
கொழுந்து பறிக்கும், இறப்பர் வெட்டும் தொழிலாளர்கள் தோட்டங்களில் வேலை செய்கின்றனர். இவரகளின் அடிப்படைச் சம்பளம் நாளொன்றுக்கு இலங்கை ரூபாவில் 500ஆகவே இருக்கிறது. வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைந்திருப்பதால் இன்றும் சம்பள உயர்வைக் கோரிய ஆர்ப்பாட்டங்கள் மலையகத்தில் நடந்து வருகின்றன.
கொவிட்-19 சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளும் விடயம், விழிப்புணர்வு கல்வி, சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் கொவிட் தொடர்பான வேறு பல விவகாரங்கள் என்பவற்றை அணுகும் விடயத்தில் பெருந்தோட்ட மக்கள் மிகவும் மோசமான ஒரு பலவீன நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். தோட்ட முகாமைத்துவம் அல்லது அரச சுகாதார திணைக்களங்கள் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து அவர்களுக்கு கல்வியூட்டுவதற்கென எத்தகைய பயனுள்ள வழிமுறைகளையும் மேற்கொண்டிருக்கவில்லை. மிக முக்கியமாக பெருந்தொற்று காலப் பிரிவின் போது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் (PHI) மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) போன்றவர்களின் பிரசன்னம் தோட்டங்களில் மிக அரிதாகவே காணப்படுகின்றன. எனினும்,
நாளாந்த அடிப்படையில் பெருந்தோட்ட பிரதேசங்களில் கணிசமான எண்ணிக்கையிலான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதுடன், மரணங்களும் இடம்பெற்று வருகின்றன. விழிப்புணர்வின்மை, மோசமான சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் கண்காணிப்பு என்பனவற்றின் காரணமாக நோய் பரவல் உயர் மட்டத்தில் நிலவி வருகின்றது.
மிக முக்கியமாக பெருந்தோட்டங்களில் நோய் காவி வைரஸ் மிக வேகமாக பரவி வருவதற்கு வீடமைப்பு மற்றும் சமூக கட்டமைப்பு என்பன முதன்மையான காரணங்களாக இருந்து வருகின்றன. தமக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது என்ற விடயத்தை அறியாதிருந்த நிலையில் வீட்டில் தங்கியிருந்த நபர்கள் மரணமடைந்திருக்கும் சம்பவங்களும்
இடம்பெற்றிருக்கின்றன.
ரூபா 5000 கொடுப்பனவிலும் அவர்களுக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. பெருந்தோட்ட முகாமைத்துவத்தினால் அவர்கள் பராமரிக்கப்பட வேண்டுமென்ற அடிப்படையில் இது இடம்பெறுகின்றது. தோட்டத் துறையில் ஒரு சிலர் மட்டுமே இந்தக் கொடுப்பனவை பெற்றுக் கொள்வதுடன், இந்த நிவாரண நிகழ்ச்சித்திட்டத்தில் பெருந்தோட்ட சமூகத்தினரை இலக்கு வைக்கும் விடயத்தில் அரச அதிகாரிகளும் ஆர்வம் காட்டாதவர்களாகவே இருந்து வருகின்றார்கள். இதனால் தான் என்னவோ எம் மலையக சமூகத்தை “சுரங்கப்படுகின்ற, அடக்கப்படுகின்ற மக்கள்” என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்கள். என்பதை எண்ணி கவலையடைகிறேன். அதனால்தான் மலையக மக்களை மெதுவாக வளர்ந்து வரும் சமூகம், மாறி வரும் சமூகம் என்று கூறுவது சாலச்சிறந்தது.
மாறிவரும் மலையக சமூகம் என்று கூறும் போது
பெரும் போராட்டத்திற்கு மத்தியில் மாறிவரும் மலையக சமூகம் இன்று அனைத்துத் துறைகளிலும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. சட்டத்தரணிகள் முதல் தலைநகரில் பெரும் வர்த்தகர்கள் வரை மலையகத் தமிழ்ச் சமூகத்தில் இருந்து இணைந்து வருகின்றனர். கல்வியிலும் மலையக சமூகம் முன்னேறி வருகின்றது. அண்மைய ஆண்டு புள்ளிவிபரங்களின்படி பல்கலைக்கழக பிரவேசமும் வரவேற்கும் வகையில் அமைந்துள்ளன.
மலையக இளைஞர்கள், யுவதிகள் அனைத்துத் துறைகளிலும் தற்போது சாதித்து வருகின்றனர். அதேநேரம் எமது தோட்டத் தொழிலாளர்கள் நியாயமான சம்பளத்திற்கு இன்னமும் போராட வேண்டியிருக்கிறது. அத்துடன், வறுமையின் காரணமாக தந்தை வெளியிடத்திற்கும், தாய் வெளிநாட்டிற்கும் தொழிலுக்காக சென்று விடுகின்றனர். இதனால் எமது பிள்ளைகளின் கல்வி மீதான கவனம் குறைகிறது.
அத்துடன், பாடசாலைகளின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அவர்களின் கல்விக்கான தடைகளைத் தகர்த்தெறிய வேண்டும். திறமைகள் கொட்டிக் கிடக்கும் மலையகத்தை மிகப் பெரிய கல்விச் சமூகமாக மாற்ற முடியும்.
எமது சமூகத்தின் விடுதலை கல்வியில் தங்கியுள்ளது. இளைஞர், யுவதிகள் எப்படி அனைத்துத் துறைகளிலும் சாதிக்க ஆரம்பித்துள்ளதைப் போல மகச் சிறந்த கல்விச் சமூகமாகவும் மாற வேண்டும். எமது சமூகத்தை மிகப் பெரிய கல்விச் சமூகமாக மாற்றுவதில் அனைவருக்கும் பங்கு இருக்கிறது. ”எனவே தான்
சமூகம் வளர்ச்சி அடைந்த சமூகமாக திகழ வேண்டுமாயின் அந்த சமூகம் கல்வியில் உயர்நிலையை அடைய வேண்டும். கல்வியில் உயர்வடையும் போதே அந்த சமூகம் அரசியல், பொருளாதார, கலை, கலாசார பண்பாட்டு ரீதியாக உயர்வடைந்த சமூகமாக மாறும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ரவிச்சந்திரன் சாந்தினி,
நுண்கலைத்துறைவிசேடகற்கை,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை