இந்திய அரசாங்கத்தால் மீனவர்களுக்கு என வழங்கப்பட்ட உலர் உணவு பொதிகள் மீனவர்கள் பலருக்கு வழங்கப்படாமல் , அரசியல் கட்சி ஒன்றின் பிரதிநிதிகள் , உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கே பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளதுள்ளதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளத்தினர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
இந்திய அரசினால், யாழ்.மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு என தலா 5ஆயிரம் ரூபாய் பெறுமதியான 600 உலர் உணவு பொதிகள் இந்திய உயர்ஸ்தானிகரின் பங்குபற்றலுடன் யாழ்.மாவட்ட செயலகத்தில் வைத்து கடந்த வாரம் வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட உணவு பொதிகள் மீனவ சமூகத்தினருக்கு கிடைக்கவில்லை. அந்த உதவிகள் மீனவர் அல்லாதோர் பலருக்கு கிடைத்துள்ளது.
அதனால் , யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த பல மீனவர் சங்கங்களுக்கு இந்த விடயம் தொடர்பில் குழப்ப நிலை காணப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் செயற்படும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும், கட்சி அங்கத்தவர்களுக்கும், கட்சி ஆதரவாளர்களுக்குமே, உணவு பொதி வழங்கப்பட்டதாக அறிந்துகொண்டோம்.
இதேவேளை சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உணவுப் பொதியானது கடற்றொழிலாளர் சங்க சமாசத்தினரால் உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டு சகல மீனவ குடும்பத்திற்கும் குறித்த உதவிகள் சென்று அடைந்தது.
ஆனால் , இந்திய அரசினால் வழங்கப்பட்ட உணவு பொதி தொடர்பில் மீனவர் சங்க சமாசங்களோடு கலந்துரையாடாது தனிப்பட்ட ரீதியில் தன்னிச்சையாக பெயர் விவரங்கள் சேகரிக்கப்பட்டு கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தின் ஊடாக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் பல மீனவ குடும்பங்களுக்கு குறித்த உதவிகள் கிடைக்கப்பெறவில்லை என மேலும் தெரிவித்தனர்.