இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு நீண்டகால தீர்வுகளை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொறுப்புவாய்ந்தவர்களிடம் அமெரிக்க அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய சூழ்நிலைக்கு நாடாளுமன்றம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், எந்தவொரு அரசியல் கட்சியின் முன்னேற்றத்திற்காகவும் அல்ல என்றும், மாறாக மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வை வழங்குவதற்கு தற்போதுள்ள அரசோ அல்லது அரசியலமைப்பு ரீதியாக நியமிக்கப்படும் புதிய அரசோ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் நேற்றைய தினம் (09) இடம்பெற்ற போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அதிருப்தி தெரிவித்துள்ள அமெரிக்க அரசாங்கம், போராட்டத்தின் போது வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.