இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்த எழிலனை அடுத்த வழக்கு விசாரணையின் போது மன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் அல்லது அவரை முன்னிலைப்படுத்த முடியாமைக்கான காரணங்களை விளக்க வேண்டும் என இராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் உட்பட சரணடைந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்த 12 பேரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த பல வழக்குகளில் முதல் ஐந்து வழக்குகளின் தீர்ப்பு வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டது.
இதற்கமைய, முதலாவது வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள காணாமலாக்கப்பட்டவர் தொடர்பில் மனுதாரரின் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இது குறித்து இராணுவத்தினர் திருப்திகரமான பதிலை முன்வைக்கவில்லை என தெரிவித்துள்ளது.
மனுதாரரால் முன்வைக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில், காணாமலாக்கப்பட்டவர் இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதனை மறுப்பதற்கான விடயங்களை இராணுவத்தினர் மன்றில் இன்று முன்வைக்கவில்லை என மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்தார்.
எனவே, மனுதாரரின் வேண்டுகோளின் பிரகாரம், ஆட்கொணர்வு மனுவினுடைய எழுத்தாணையை அனுமதித்த நீதிமன்றம், அடுத்த தவணையில் காணாமல் ஆக்கப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் அல்லது அவர் காணாமல் போனமை தொடர்பான காரணங்களை விளக்க வேண்டுமென இராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, மற்றைய வழக்கில் மனுதாரர் போதுமான ஆவணங்களை மன்றில் சமர்ப்பிக்காதமையினால், அந்த வழக்கை தள்ளுபடி செய்து வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏனைய மூன்று வழக்குகள் மீதான தீர்ப்புகளையும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 27 ஆம் திகதி அறிவிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் மேலும் தெரிவித்தார்.