Home இலங்கைமுள்ளிவாய்க்கால் – 17 ஆம் ஆண்டு நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் – 17 ஆம் ஆண்டு நினைவேந்தல்

by admin
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பருத்தித்துறை நகரில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்நினைவேந்தல் நிகழ்வானது பருத்தித்துறை நகர் பேருந்து நிலைய பகுதியில் இடம்பெற்றுள்ளது. முள்ளிவாய்க்கால் போர்க்களத்தின் இறுதி நாட்கள் வரை அங்கிருந்து இனப்படுகொலையின் உயிர்வாழும் சாட்சியமாக வாழும் வர்த்தகர் க.யோகநாதன் பொதுச்சுடரினை ஏற்றியதை தொடர்ந்து அகவனக்கம் இடம்பெற்று மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள முதல் விடுதலை போராளி பொன்.சிவகுமாரின் சிலை அருகில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது பொன். சிவகுமாரின் சிலைக்கு மாலை அணிவித்து முள்ளிவாய்க்கால் நினைவாக பொதுச் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது டன் பொதுமக்களில் 100 பேருக்கு அரிசிப்பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அதேவேளை முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று திங்கட்கிழமை(18) மன்னாரிலும் நினைவேந்தல் இடம் பெற்றது.  தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி. எஸ். சிவகரன்  தலைமையில் இன்று திங்கட்கிழமை (18) காலை மன்னார் நகர பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலைக்கு முன்பாக இடம் பெற்றது. இதன் போது  முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த  நினைவேந்தல் நிகழ்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார்,மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா,அரசியல் பிரதிநிதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
#mullivaikal #jaffna #mannar #tamilnews
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More