52
யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த மூன்று கடற்தொழிலாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கடற்தொழிலுக்காகக் கடலுக்குச் சென்றிருந்த நிலையில், எதிர்பாராதவிதமாகத் தொழில்நுட்பக் கோளாறு மற்றும் கடற்சீற்றம் காரணமாகக் காணாமல் போயிருந்தனர். இவர்கள் சனிக்கிழமை காலை வரை வீடு திரும்பாததால், பதற்றமடைந்த உறவினர்கள் மற்றும் உள்ளூர் கடற்தொழிலாளர் சங்கங்கள் இணைந்து அதிகாரிகளுக்கு அவசரத் தகவலை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, கடற்தொழில் அமைச்சரின் நேரடிப் பணிப்பின் பேரில், இலங்கை கடற்படையினர் உடனடியாகத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் களமிறங்கினர். கடற்படைக்குச் சொந்தமான அதிவேகப் படகுகள் மூலம் நயினாதீவு மற்றும் அதனை அண்டிய ஆழ்கடல் பரப்பில் சனிக்கிழமை முதல் தீவிரமான தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
நீண்ட தேடுதலின் பலனாக, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த கடற்தொழிலாளர்கள் மூவரும் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான முதலுதவிகள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இன்றைய திகதியான ஞாயிற்றுக்கிழமை அவர்கள் அனைவரும் பாதுகாப்பாகக் குறிகட்டுவான் இறங்குதுறைக்கு அழைத்து வரப்பட்டு, காவற்துறையினரின் முன்னிலையில் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பல மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு தங்களது உறவுகள் நலமுடன் திரும்பியதால் புங்குடுதீவு கடற்தொழிலாளர் கிராமத்தில் நெகிழ்ச்சியான சூழல் காணப்பட்டது.
Spread the love

