அனுராதபுரம்,அட்டமகாஸ்தானாதிபதியால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு ஆதரவாக நாடு முழுவதும் பரவலாக கவன ஈர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் ஒரு சூழலில்,இம்முறை வெசாக் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டிருக்கிறது.குறிப்பாக தமிழ்ப் பகுதிகளில் வெசாக் கொண்டாட்டங்கள் பெருமெடுப்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. யாழ் நகரப் பகுதியில் அரியகுளம் சந்தி தொடக்கம் போலீஸ் நிலைய வளாகம் வரையிலுமான பகுதி கிட்டத்தட்ட வெசாக் வலயமாகவே காணப்பட்டது.
அன்றைய நாள் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்து கொண்டிருந்தேன்.வழி நெடுக வெசாக் தோரணங்கள்,அலங்காரங்கள்,வெசாக் கூடுகள்…நாவற்குழிச் சந்தியில் புகையிரத நிலையத்துக்கு முன்பாக பந்தல்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு குடி பானம் பரிமாறப்பட்டது. சாவகச்சேரி போலீஸ் நிலையத்திற்கு முன்னே ஒரு போலீஸ்காரர் வாகனத்தை மறைத்தார்.எமது வாகனத்தின் சாரதி வாகன அனுமதி பத்திரங்களை வெளியே எடுத்தார். போலீஸ்காரர் சொன்னார் “இல்லை அங்கே ஐஸ் கிரீம் இருக்கிறது. குடித்து விட்டுப் போங்கள்” என்று.கண்டி வீதி நீட்டுக்கும் ஆங்காங்கே வெசாக் அலங்காரங்களை காணக்கூடியதாக இருந்தது
ஆனால் வடக்கு கிழக்கில் வெசாக் கொண்டாட்டங்களை தொகுத்து பார்த்தால், பெரும்போக்காக தெரிவது என்னவென்றால்,அது ஒரு படை மயப்பட்ட அல்லது போலீஸ் மயப்பட்ட விசா கொண்டாட்டம்தான்.அது மக்கள் மயப்பட்டது அல்ல.பெரும்பாலான படை முகாம்களின் முகப்பில் வெசாக்கூடுகள் தொங்கின.அலங்காரங்கள் காணப்பட்டன.யாழ்ப்பாணம் அரியகுளம் சந்தி, போலீஸ்நிலைய வளாகம் போன்றவற்றில் படைத்தரப்பும் காவல்துறையினரும் அலங்காரங்களை செய்திருந்தார்கள்.தமிழ் மக்கள் அங்கே பார்வையாளர்களாகத்தான் பங்குபற்றினார்கள்.பார்வையாளர்களாக வந்த மக்களுக்கு தானம் செய்யப்பட்டது.உணவு சிற்றுண்டி குளிர்பானம் போன்ற வழங்கப்பட்டன.
சில தமிழ் டியூப்பர்கள் தேடித்தேடி வெசாக் கொண்டாட்டங்களை அலங்காரங்களை காட்சிப்படுத்தினார்கள். அரசுத் தலைவர் அனுர வடக்கில் எங்கே வந்தாலும் அங்கே கமராவை தூக்கிக்கொண்டு ஓடிவரும் சில யூடியூப்பர்கள் வெசாக் கொண்டாட்டங்களில் மிகவும் ஆர்வமாகவும் குதூகலமாகவும் கலந்துகொண்டதைக் காணக்கூடியதாக இருந்தது.வரிசையில் நிற்காமல் வரிசையை முறித்துக்கொண்டு போய் சிற்றுண்டிகளை எடுத்து அருந்தினார்கள்.கிழக்கில் சிலர் தானம் செய்யும் போலீஸ்காரர்களைச் சுத்திச் சுத்திப் படம் எடுத்து,பேட்டி கண்டார்கள்.எனினும் அது பெருமளவுக்கு ஒரு படை மயப்பட்ட மதக் கொண்டாட்டம் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.
ஆரிய குளம் சந்தியில் நடந்த நிகழ்வில் ஆளுநர் கலந்துகொண்டார். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவரும் கலந்து கொண்டார்.ஏனைய மதப் பிரதிநிதிகளும் அரசு அலுவலர்களும் கலந்து கொண்டார்கள்.அவர்கள் மத்தியில் சீருடை அணிந்திராத,தூய வெள்ளை உடையில் படை அதிகாரிகள் அதிகமாகக் காணப்பட்டார்கள்.அது ஒரு படை மயப்பட்ட நிகழ்வு.மக்கள் மயப்பட்ட நிகழ்வு அல்ல.
வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் கூட கத்தோலிக்க திருச்சபையின் கார்டினல் மல்கம் ரஞ்சித் படையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட வெசாக் தான நிகழ்வில் காணப்பட்டார்.அண்மையில் கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு ஆயர் இல்லம் உத்தியோபூர்வமாக வெளியிட்ட ஓர் அறிக்கையில் இலங்கை தீவில் நடந்தது இனப்படுகொலை அல்ல என்று கூறியிருந்தது.பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு எதிரான படை நடவடிக்கை அதுவென்று அந்த அறிக்கை கூறுகிறது.
இவ்வாறு வடக்கில் அதிகம் படைமயப்பட்ட,அதிகம் இன மயப்பட்ட,அதிகம் மக்கள் மயப்படாத ஒரு வெசாக் கொண்டாட்டங்களில்,பெருமளவிலான தமிழர்கள் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டமை தொடர்பாக சமூக ஊடக வலைத்தளங்களில் ஓர் ஒப்பீடு செய்யப்பட்டிருந்தது.பொதுவாக பௌர்ணமி நாட்களில் தையிட்டியில் போராட்டம் இடம்பெறும்.வழமைபோல கடந்த வாரமும் அந்தப் போராட்டத்தில் 50க்கும் குறைவானவர்களே காணப்பட்டார்கள். ஆனால் ஆரியகுளம் சந்தியில் நூற்றுக்கணக்கானவர்கள் காணப்பட்டார்கள்.இரண்டையும் ஒப்பிட்டு சமூகஊடக வலைச் சூழலில் விவாதங்கள் இடம்பெற்றன.
அரியகுளம் சந்திக்குப் போனவர்கள் பெருமளவுக்கு பொழுதுபோக்கப் போனார்கள்.பார்வையாளர்களாகப் போனார்கள்.அங்கு வழங்கப்பட்ட சிற்றுண்டி குளிர்பானம் போன்றவற்றை அருந்துவதற்கு வரிசையாக நின்றார்கள்.யாழ்ப்பாணம் முற்ற வெளியில் இடம்பெறும் இசைக் கச்சேரிக்கு போவது போல,வணிகக் கண்காட்சிக்குப் போவது போல,பார்வையாளர்களாக அங்கே போனார்கள்.அதை வைத்து அது மக்கள் மயப்பட்ட ஒரு கொண்டாட்டம் என்று கூறிவிட முடியாது.
இவ்வாறு ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த 17 ஆண்டுகளின் பின்னரும் புத்த பகவான் பிறந்த,ஞான நிலையை அடைந்த,பரிநிர்வானம் அடைந்த நாளாகிய,விசாக பௌர்ணமி நாளானது,இலங்கைத் தீவில் இப்பொழுதும் அதிகம் படை மயப்பட்டதாக,இன மையப்பட்டதாக,அரசியல் மயப்பட்டதாகத்தான் காணப்படுகிறது.
இவ்வாறு வடக்கில் அதிகம் படை மயப்பட்ட ஒரு பண்டிகையாகிய வெசாக் நாளில்,யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் கட்டப்பட்டிருந்த வெசாக் அலங்காரங்கள் இனம் தெரியாதவர்களால் உடைக்கப்பட்டிருக்கின்றன.
இது ஊடகங்களில்,குறிப்பாக சமூக ஊடக வலைத்தளங்களில் இன நல்லிணக்கதைச் சிதைக்கும் ஒரு செயலாக வருணிக்கப்படுகிறது.யாழ்.பல்கலைக் கழகத்தில் சிங்கள மாணவர்களை அதிகமாக கொண்டிருக்கும் பீடங்களில் ஒன்று முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம் ஆகும்.யாழ்.பல்கலைக்கழகம் கடந்த 17 ஆண்டுகளாகவும் படிப்படியாக சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு உண்டு.ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் உடனடுத்து வந்த ஆண்டுகளில் யாழ் பல்கலைக்கழகத்திற்குள் வெசாக் அலங்காரங்களைக் கட்டுவதில் படைத்தரப்பினரின் பங்களிப்பு அதிகம் இருந்தது. உலகில் படைத்துறை சார்ந்த பல்கலைக்கழகங்களில் படைத்தரப்பின் பிரசன்னம் இருப்பது இயல்பானது.ஆனால் ஒரு சிவில் பல்கலைக்கழகத்துக்குள்,ஒரு மரபுரிமைப் பல்கலைக்கழகத்துக்குள்,இவ்வாறு வெசாக் சோடினைகளைப் படைத்தரப்பே செய்வதுபோன்ற வேறு முன்னுதாரணங்கள் உலகில் உண்டா?
அதுமட்டுமல்ல 2009க்குப் பின் உடனடுத்து வந்த ஆண்டுகளில், பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் ஒரு பகுதி மாணவிகளுக்கும் மாணவர்களுக்கும் படை முகாம்களில் இருந்து மதிய உணவு பார்சல்கள் விநியோகிக்கப்படுவதாகவும் அவதானிக்கப்பட்டது.மத்தியான நேரங்களில் மாணவிகள் தங்கியிருக்கும் விடுதிகளுக்கும் முன்பு ஒரு முச்சக்கர வண்டி அவ்வாறு உணவு பாசல்களை விநியோகிப்பது அவதானிக்கப்பட்டது.இவ்வாறு படைத்தரப்பு மாணவர்களுக்கு உணவு பாசல்களை விநியோகிப்பதும் வெசாக் பண்டிகை அலங்கார வேலைகளை செய்வதும் யாழ்.பல்கலைக்கழகத்தில் மட்டும்தானா அல்லது வேறு பல்கலைக்கழகங்களிலும் இடம்பெற்றதா?
2015ல் இடம் பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின் இந்த நடைமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டன.இப்பொழுது படைத்தரப்பு பல்கலைக்கழகத்துக்குள் பிரவேசிப்பதில்லை.மாணவர்களுக்கு உணவு பார்சல் கொடுப்பதும் இல்லை. ஆனால் கடந்த 17 ஆண்டுகளிலும் பல்கலைக்கழகம் படிப்படியாக சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு வலிமையாகி வருகிறது.
இவ்வாறு சிங்கள மாணவர்களை அதிகமாகக் கொண்ட ஒரு பீடத்தில் கட்டப்பட்ட வெசாக் அலங்காரங்களை யாரோ உடைத்திருக்கிறார்கள்.இது தொடர்பாக சிங்கள மாணவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் செய்திருக்கிறார்கள்.சிங்கள மாணவர்களின் வழிபாட்டு உரிமையை ஆதரித்தும் வெசாக் அலங்காரம் உடைக்கப்பட்டதைக் கண்டித்தும், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.வெசாக் கூடுகளைக் கட்டுவதற்குரிய அனுமதியை நிர்வாகத்திடமிருந்து பெற்றுக் கொடுத்தது மாணவ ஒன்றியம்தான்.யாழ் பல்கலைக்கழகத்தின் கடந்த 17 ஆண்டுகால அனுபவங்களை மனதில் வைத்து,இன முரண்பாடுகளைப் பிரதிபலிக்காமல்,இன நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கும் விதத்தில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது.
தமிழ் மக்கள் சமயப் பல்வகைமைக்கு எதிரானவர்கள் அல்ல.மத மேலாண்மைக்குத்தான் எதிர்.தேசியவாதம் என்பது ஜனநாயகத்தை உள்ளடக்கமாகக் கொண்டது என்று மேற்கத்திய அறிஞர்கள் கூறுவார்கள்.தேசியவாதத்தின் அடிச்சட்டம் ஜனநாயகம்தான்.இந்த அடிப்படையில் பார்த்தால்,தேசியவாதம் எனப்படுவது ஒரு சமூகத்தின் பல்வகைமைகளின் மீது கட்டியெழுப்பப்படுவதுதான்.
அதேசமயம்,தமிழ் மக்கள் எப்பொழுதும் மத,இன,மொழி மேலாண்மைக்கு எதிராகப் போராடி வருகிறார்கள்.இலங்கைத் தீவின் பிரச்சினையே ஒரு மதத்தின்,ஒரு மொழியின்,ஓர் இனத்தின் மேலாண்மை அரசியல்தான்.அந்த மேலாண்மையை உயர்கல்வி நிறுவனங்களுக்குள்ளும் படிப்படியாக ஸ்தாபிக்க முற்படுவது இன ஒடுக்கு முறையின் ஒரு பகுதிதான்.வெசாக் கூடு உடைக்கப்பட்ட அடுத்தடுத்த நாள் கிளிநொச்சியில் ஒரு பாடகர் பயங்கரவாதத் தடைச் சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். சுரேஷ் சாலே சிறைக்குள் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார் என்று வெளிவரும் செய்திகளை எதிர்க் கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிராகக் கையாண்டு விடாமலிருக்க வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை உணர்வோடு அந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதா?
தமிழ் மக்கள் என்றைக்குமே பௌத்த மதத்தைப் புறத்தியாகப் பார்த்தது இல்லை.தமிழ் மக்களுடைய பிரச்சினை என்னவென்றால்,முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியதுபோல “புத்தர் சிலைகளை எல்லைக் கற்களாக நகர்த்தும்”சிங்கள பௌத்த அரசியல்தான்.எனவே தமிழ்மக்கள் யாழ் பல்கலைக்கழகம் திட்டமிட்டு,படிப்படியாக சிங்களபௌத்த மயப்படுவதை ஏற்றுக்கொள்ளவில்லை.தையிட்டி விகாரையையும் அதனால்தான் தமிழ் மக்கள் எதிர்க்கிறார்கள்.அதேசமயம் தமிழ் பகுதிகளில் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ வசிக்கின்ற சிங்களமக்கள் தங்களுடைய மத நம்பிக்கைகளைப் பேணுவதையும் பின்பற்றுவதையும் கொண்டாடுவதையும் எதிர்க்கவில்லை.எதிர்க்கவும் முடியாது.ஏனென்றால் தேசியவாதம் எனப்படுவது சமயப் பல்வகமையின் மீதுதான் கட்டி எழுப்பப்படுவதுதான்.

