சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அந்நாட்டில் மட்டும் இதுவரை 492 பேர் உயிரிழந்துள்ளனர். 24,324 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளதால் மக்களிடையே பெரும் அச்சம் நிலவிவருகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் 20-ம் தேதி ஜப்பானில் உள்ள யோகோஹாமா நகரில் இருந்து சீனாவில் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹொங்கொங்குக்கு டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல் சென்றது.
இந்த கப்பலில் பயணிகள், ஊழியர்கள் உள்பட 3700-க்கும் அதிகமானோர் பயணம் செய்த இந்த கப்பல் கடந்த 25-ந்தேதி ஹாங்காங் சென்றடைந்தது. அப்போது கப்பலில் பயணம் செய்த ஹொங்கொங்ங்கை சேர்ந்த 80 வயது முதியவர் இறங்கினார். அதன் பின்னர் அந்த சொகுசு கப்பல் ஹொங்கொங்கில் இருந்து மீண்டும் ஜப்பானுக்கு புறப்பட்டது. ஆனால், ஹொங்கொங்கில் கப்பலில் இருந்து இறங்கிய 80 வயது முதியவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது கடந்த 30-ந்தேதி தெரியவந்தது.
இதற்கிடையில், ஹாங்காங் முதியவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து கப்பலில் பயணம் செய்த எஞ்சியவர்களுக்கும் வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து நேற்று ஜப்பான் நாட்டின் யோகோஹாமா நகரில் உள்ள துறைமுகத்திற்கு சென்ற சொகுசுக்கப்பல் பயணிகள் எவரையும் தரையிறங்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
இதனால் கப்பல் துறைமுகப்பகுதியை விட்டு வெளியே நடுக்கடலில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து அந்த கப்பலில் உள்ள 3,711 பயணிகளிடம் வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என்ற பரிசோதனை இன்று நடத்தப்பட்டது. இந்நிலையில், கப்பலில் பயணம் செய்த 10 பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது பரிசோதனை முடிவுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வைரஸ் பாதிக்கப்பட்ட 10 பேரும் கப்பலில் உள்ள தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் அந்த சொகுசு கப்பலில் உள்ள பயணிகள் அனைவரும் மிகுந்த அச்சத்துடன் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஒரே நாளில் 65 பேர் பலி
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலினால் பலியானோர் எண்ணிக்கை 490 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சீன அரசு நெருக்கடி நிலைக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் வுகானில் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிறப்பு மருத்துவமனைகளும் கட்டப்பட்டுள்ளன.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், வுகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 490 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. மேலும் 24,324 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று காலை நிலவரப்படி, கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 425 ஆக இருந்த நிலையில், ஒரே நாளில் 65 பேர் பலியான சம்பவம் சீன மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.