Home இலங்கையாழில் கொரோனோ சட்டத்தை மதிக்காத காவல்துறையினர்

யாழில் கொரோனோ சட்டத்தை மதிக்காத காவல்துறையினர்

by admin

முகக் கவசங்களை அணியாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சுகாதார பரிந்துரைகளை ஏற்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிகாவல்துறை மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ள அதேவேளை யாழில்  காவல்துறையினர் முக கவசம் அணியாது சுகாதார பரிந்துரைகளை மீறி செயற்பட்டு வருகின்றனர்.

யாழ்.திருநெல்வேலி கலாசாலை வீதியில் உள்ள பூட்டிய கடை ஒன்றின் முன்பாக கோப்பாய் காவல்நிலையத்தை சேர்ந்த நான்கு காவல்துறையினர் சிவில் உடையில் முக கவசம் எதுவும் அணியாது இரவு 10.30 மணியளவில் நின்று வீதிகளில் செல்பவர்களை வழிமறித்து ‘ எங்கே செல்கின்றீர்கள் ?’ என விசாரணை செய்துகொண்டிருந்தனர். நீங்கள் யார் என கேட்டவர்களுக்கு தாம் கோப்பாய் காவல்துறையினர்  எனவும் சந்தேகம் இருந்தால் காவல்நிலையம் சென்று விசாரிக்கும் படியும் பதில் கூறியுள்ளனர்

குறித்த காவல்துறையினரின் செயற்பாடுகள் மது போதையில் இருந்தமை போன்று இருந்தது. சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் அக்கடை வாசலில் நின்ற காவல்துறையினர் பூட்டிய கடையில் இருந்து சோடாக்கள் மற்றும் மிக்சர் வகை என்பவற்றை வாங்கி சென்றிருந்தனர்.

அதேவேளை யாழ்ப்பாண காவல்நிலையத்தை சேர்ந்த போக்குவரத்து பிரிவை சேர்ந்த காவல்துறையினர்  இருவரில் ஒருவர் முக கவசம் எதுவும் அணியாது கடமையில் ஈடுபட்டிருந்தார்.

அதேபோன்றே வடமராட்சி மாலு சந்தியில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு சென்றவர்களை கையுறைகள் இன்றி தொட்டு சோதனை செய்த காவல்துறையினரின் செயற்பாடு தொடர்பில் கண்டனத்தை தெரிவித்த ஊடகவியலாளர் மீது   தமது கடமைக்கு இடையூறு விளைவித்ததாக நெல்லியடி காவல்துறையினர்  வழக்கு தொடர்ந்துள்ளனர்.

யாழில் காவல்துறையினரின் செயற்பாடுகள் இந்த நிலையில் இருக்கும் போதே முகக் கவசங்களை அணியாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சுகாதார பரிந்துரைகளை ஏற்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோகண அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காவல்துறையினரே சட்டங்களை மதிக்காது நடந்து கொள்வது தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.  #காவல்துறையினர்  #கொரோனோ   #முககவசம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More