யாழ்ப்பாணம் காவல்நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற சந்தேகநபர் போதைப்பொருளுடன் கிளிநொச்சி பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
தப்பி சென்ற சந்தேகநபர் கிளிநொச்சி அக்கராயன் காட்டுப்பகுதியில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருப்பதாக யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , குறித்த பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் இளைஞனை கைது செய்துள்ளனர்.
இளைஞனை கைது செய்த போது, 3 ஆயிரத்து 800 கிராம் ஜஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு , யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளை, கடந்த மே மாதம் 12ம் திகதி காவல் நிலையத்திலிருந்து தப்பிச் சென்றிருந்தார்.
சந்தேக நபர் தப்பி சென்றமை தொடர்பில் காவல்துறை உயர் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது