Home இலங்கைகொக்கிளாய் பாலம் அமைப்பது தொடர்பில் உலக வங்கியிடம் முன்மொழிவு!

கொக்கிளாய் பாலம் அமைப்பது தொடர்பில் உலக வங்கியிடம் முன்மொழிவு!

by admin

 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை இணைக்கும் கொக்கிளாய் பாலம் அமைப்பது தொடர்பிலான முன்மொழிவு உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழுவினரிடம் முன் வைக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, சுனில் ஹந்துன்நெத்தி, இ.சந்திரசேகரன், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.சிறீபவானந்தராஜா, ஜெ.ரஜீவன், க.திலகநாதன், ம.ஜெகதீஸ்வரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கின் 5 மாவட்டங்களினதும் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உலக வங்கியால் வடக்கு மாகாணத்திற்கு பல தடவைகள் மேற்கொள்ளப்பட்ட பயணம் மற்றும் அதிகாரிகள், மக்கள் சமூகங்களுடனான கலந்துரையாடலின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 8 வலயங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் 7 வலயங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்தில் 3 வலயங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 2 வலயங்களும் வடக்கின் ஏனைய 3 மாவட்டங்களில் தலா ஒரு வலயங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை இணைக்கும் கொக்கிளாய் பாலமும் முன்மொழிவாக உள்ளடக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியால் விவசாயம், மீன்பிடி, சுற்றுலாத்துறை, தொழில்நுட்பம் ஆகிய 4 விடயப் பரப்புக்களின் கீழ் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்பதுடன் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் முதல் கட்ட செயற்படுத்தலுக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் ஒவ்வொரு மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள் தங்களது மேலதிக தேவைப்படுத்தல்களையும் முன்வைத்து, எதிர்காலத்தில் உலக வங்கியால் அவற்றை கவனத்திலெடுக்குமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.

உலக வங்கியின் செயற்றிட்டத்தை தொய்வின்றி விரைவாக செயற்படுத்துவதற்காக இணைப்புக்குழுவொன்றும் முன்மொழியப்பட்டது.

அந்தக் குழு அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுப்பது என்று கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More