வலி. வடக்கு நில மீட்புப் போராட்டத்தின் போது, மழையிலிருந்து தற்காத்துக்கொள்ளத் தற்காலிகமாகத் தரப்பாள் (Tarpaulin) கட்டிய காணி உரிமையாளர்களைக் கைது செய்யப் போவதாக லாலி காவல் நிலையப் பொறுப்பதிகாரி மிரட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலிட்டி பகுதியில் அமைந்துள்ள இராணுவத் தளபதிகளின் சொகுசு தங்குமிடத்திற்கு (Commando Bungalow) முன்பாகத் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டத்தின் போதே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது திடீரெனப் பலத்த மழை பெய்துள்ளது. முதியவர்கள் மற்றும் பெண்கள் மழையில் நனையாமல் இருக்க, இராணுவ பங்களாவின் எல்லை வேலியில் ஒரு தரப்பாள் துணியைக் கட்டியுள்ளனர்.அவ்விடத்திற்கு வந்த பலாலி காவல் நிலையப் பொறுப்பதிகாரி, “உடனடியாகத் தரப்பாளைக் கழற்றுங்கள், இல்லையெனில் அனைவரையும் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பேன்” என மிரட்டியுள்ளார் போராட்டக்காரர்கள் இதனைத் தமது அலைபேசிகளில் காணொளி எடுக்க முற்பட்டபோது, காவல்துறையினா் அவர்களுடன் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டுவிட்டு அவ்விடத்திலிருந்து சென்றுள்ளனர்.
கீரிமலை – பருத்தித்துறை வீதியில் கடற்கரைப் பக்கமாக உள்ள காணிகள் இராணுவ முகாம் பகுதிகளோ அல்லது உயர் பாதுகாப்பு வலயங்களோ கிடையாது. அவை முழுக்க முழுக்க இராணுவ உயர் அதிகாரிகளின் “சொகுசு வாழ்விற்காக” ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமான கடற்கரை பகுதியை இராணுவம் மற்றும் காவல்துறையினா் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதனால் அப்பகுதி மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் தவிக்கின்றனர். பலாலி பகுதியில் சந்தைக் கட்டடங்கள் இருந்தாலும், அங்கு இராணுவத்தினரின் உணவகங்களே இயங்குகின்றன. சாதாரண பொதுமக்கள் அல்லது தனியார் வியாபாரிகள் அங்குத் தொழில் செய்ய அனுமதி மறுக்கப்படுகின்றது என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் ஆதங்கம் தொிவித்துள்ளனா்.
யாழ்ப்பாணத்தில் கடந்த மே 3-ஆம் திகதி நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், கீரிமலை – பருத்தித்துறை வீதியிலுள்ள கடற்கரைப் பக்க காணிகள் இன்னும் ஒருசில மாதங்களில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், கள நிலவரப்படி காவல்துறையினரும் இராணுவத்தினரும் மக்களை அச்சுறுத்தும் பாணியில் செயற்படுவது மக்களிடையே பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமது சொந்த மண்ணில் ஒரு துண்டு தரப்பாள் கட்டி மழையிலிருந்து ஒதுங்கக் கூட அனுமதியற்ற நிலையில் ஈழத்தமிழர்கள் 2026-இலும் போராட வேண்டியிருப்பது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். “பாதுகாப்பு” என்ற காரணத்தைக் காட்டி மக்களின் வாழ்விடங்களைச் சொகுசு பங்களாக்களாக மாற்றி வைத்துள்ள இராணுவத்தினர், அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். காவல்துறையினரின் இத்தகைய மிரட்டல்கள் நில மீட்புப் போராட்டத்தை முடக்காது, மாறாக மக்களின் ஆவேசத்தையே அதிகரிக்கும் என்பதை இன்றைய நிகழ்வுகள் காட்டுகின்றன.
#ValiNorthProtest #PalalyPolice #MilitaryOccupation #JaffnaLandRelease #HumanRightsSL

