Home இலங்கைதேரர்களால் பாலியல் மற்றும் பிற அத்துமீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 488 சிறுவர்கள் தொடர்பான வழக்குகள் பதிவு!

தேரர்களால் பாலியல் மற்றும் பிற அத்துமீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 488 சிறுவர்கள் தொடர்பான வழக்குகள் பதிவு!

by admin
2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், தேரர்களால் பாலியல் மற்றும் பிற அத்துமீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 488 சிறுவர்கள் தொடர்பான வழக்குகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட முஸ்லிம் பெண்கள் நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர் ஜுவைரியா முகைதீன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்த கண்டனப் பேரணி நேற்று (29) வெள்ளிக்கிழமை காலை மன்னார் மாவட்ட செயலகம் முன்பாக நடைபெற்றது. சமய அதிகாரம் கொண்ட சிலரால் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராகவும், பாதிக்கப்பட்டோருக்கு நீதி கோரியும் இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜுவைரியா முகைதீன், “அனுராதபுரத்தில் 13 வயது சிறுமி மீதான பாலியல் வல்லுறவு சம்பவம் முழு நாட்டையும் உலுக்கும் அளவுக்கு வேதனையானது. இப்படிப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உடனடி மற்றும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், “2018 முதல் 2022 வரை தேரர்களால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 488 சிறுவர்கள் தொடர்பான வழக்குகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஏழை மற்றும் புறக்கணிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பலர் புகார் அளிக்காமல் இருக்கக்கூடும் என்பதால் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம்” என்றார்.
இதேவேளை, பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளுக்குள்ளானவர்களுக்கு ஆதரவாக சட்டரீதியான பாதுகாப்பு வழங்கப்படுவது குறித்தும் அவர் கவலை வெளியிட்டார். சமூக நீதி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பில் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
குறிப்பு: ஜுவைரியா முகைதீன் வெளியிட்டுள்ள இந்தத் தகவல்கள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் தனித்துவமான அதிகாரப்பூர்வ அறிக்கை இதுவரை வெளியிடப்பட்டுள்ளதா என்பது தனியாக உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More