Home இலங்கைநீதித்துறையின் சுயாதீனத்தை கேள்விக்குள்ளாக்கும் திடீர் இடமாற்றங்கள்: ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் அவசர கடிதம்!

நீதித்துறையின் சுயாதீனத்தை கேள்விக்குள்ளாக்கும் திடீர் இடமாற்றங்கள்: ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் அவசர கடிதம்!

by admin
யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி. அலெக்ஸ்ராஜா அவர்கள், பதவியேற்ற ஒரே மாதத்திற்குள் பதுளை சிவில் மேன்முறையீட்டு உயர் நீதிமன்றத்திற்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை சட்டத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விளக்கமற்ற இடமாற்றத்தின் பின்னணியில் நிர்வாகத் துறையினரின் தலையீடுகள் இருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாக யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு, யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அலெக்ஸ்ராஜா அவர்கள், 2026 மே 31ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மிகக் குறுகிய காலத்திற்குள் இடமாற்றப்பட்டுள்ளார்.
வட மாகாண ஆளுநருக்கு எதிராக இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு ஒன்றில், நீதிபதி வழங்கிய சில உத்தரவுகளே இந்த பழிவாங்கல் இடமாற்றத்திற்குக் காரணம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரியவருவதாக அச்சங்கம் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் வட மாகாண ஆளுநர் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு நீதித்துறைச் செயற்பாடுகளில் தலையிட்டுள்ளார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நீதித்துறை சேவைகள் ஆணைக்குழுவின் இடமாற்ற அதிகாரத்தை ஏற்பதாகக் குறிப்பிட்டுள்ள சட்டத்தரணிகள் சங்கம், இத்தகைய திடீர் மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற இடமாற்றங்கள் ஒட்டுமொத்த நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைத்துவிடும் என எச்சரித்துள்ளது.
“நீதித்துறையின் செயற்பாடுகளில் தலையீடு இருப்பதாகச் சிறிதளவு தோற்றமளிப்பதுகூட மிகக் கடுமையான விடயமாகும்” என்று சுட்டிக்காட்டியுள்ள சங்கம், நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் இத்தகைய தலையீடுகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த விவகாரத்தை மிக உயர்ந்த முன்னுரிமையுடன் விசாரித்து தங்களை நேரில் சந்திப்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More