Home இலங்கையாழில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபா திருட்டு: சிறுவன் உட்பட இருவர் கைது; புதைக்கப்பட்ட பணம் மீட்பு!

யாழில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபா திருட்டு: சிறுவன் உட்பட இருவர் கைது; புதைக்கப்பட்ட பணம் மீட்பு!

by admin
யாழ்ப்பாணம், வடமராட்சி வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியில் உள்ள வீட்டொன்றில், ஒரு கோடியே 15 இலட்சம் ரூபா பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் 16 வயதுடைய சிறுவன் உள்ளிட்ட இருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் தலைமறைவாகியுள்ளார்.
சீட்டுத் தொழில் செய்யும் நபர் ஒருவரின் வீட்டின் புகைக்கூட்டை (சமையலறைப் பகுதி) உடைத்து, ஆட்கள் இல்லாத வேளையில் இந்தத் திருட்டு அரங்கேறியுள்ளது. வீட்டின் உரிமையாளர் வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, கெருடாவிலைப் பகுதியைச் சேர்ந்த 16 வயதுச் சிறுவனும் 19 வயது இளைஞனும் முறையே வல்லைச் சந்தியிலும், யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியிலும் வைத்து கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளில், வீட்டின் உள்ளே புகுந்து பணத்தைக் கண்டதும், அவர்கள் நெடுங்கேணியைச் சேர்ந்த ஒருவருக்கு ‘வீடியோ கோல்’ மூலம் தொடர்பு கொண்டு காட்டியுள்ளனர். அவரின் அறிவுறுத்தலின் பேரில், அனைத்துப் பணத்தையும் நெடுங்கேணிக்கு எடுத்துச் சென்று அங்குள்ள காணியொன்றில் புதைத்து வைத்துவிட்டு, பின்னர் யாழ்ப்பாணம் திரும்பியதாகக் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து விரைந்து செயற்பட்ட காவற்துறையினர், நெடுங்கேணிப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த 74 இலட்சம் ரூபா பணத்தை மீட்டுள்ளனர். எஞ்சிய தொகையுடன் நெடுங்கேணியைச் சேர்ந்த நபர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைக் கைது செய்யக் காவற்துறையினர் வலைவீசியுள்ளனர். நீதிமன்ற அனுமதியைப் பெற்றுச் சந்தேகநபர்களைத் தடுப்புக்காவலில் வைத்து வல்வெட்டித்துறை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More