126
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கிழக்கு பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் நாகர்கோவில் கிழக்கு பகுதியில் உள்ள காணி ஒன்றினை துப்புரவு செய்யும் பணியில் உள்ளூர் பொதுமக்கள் ஈடுபட்டிருந்த போதே, பற்றைகளுக்குள் மறைந்திருந்த நிலையில் இந்த கைக்குண்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்களால் உடனடியாக மருதங்கேணி காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு விரைந்த மருதங்கேணி காவற்துறையினர், முதற்கட்டமாக குண்டு கண்டெடுக்கப்பட்ட பகுதியை சுற்றிலும் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினர். அத்துடன், குறித்த குண்டு நீண்ட நாட்களாக அங்கே கைவிடப்பட்ட நிலையில் இருந்திருக்கலாம் என காவற்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தற்போது, இந்த கைக்குண்டினை பாதுகாப்பான முறையில் மீட்பதற்கும், அதனை செயலிழக்கச் செய்வதற்குமாக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் காவற்துறையினர் அனுமதி கோரியுள்ளனர். நீதிமன்ற அனுமதி கிடைத்தவுடன், விசேட அதிரடிப்படையினரின் (STF) உதவியோடு குண்டினை மீட்டு செயலிழக்கச் செய்வதற்கான மேல்நடவடிக்கைகளை மருதங்கேணி காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே தற்காலிக பதற்றத்தை ஏற்படுத்திய போதிலும், காவற்துறையினர் நிலைமையை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.
Spread the love

