யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைத் துறைமுகத்தில் இருந்து இந்தியாவின் நாகப்பட்டினம் நோக்கிப் புறப்படவிருந்த பயணிகள் கப்பலில், தங்கக் கட்டிகளை விழுங்கி வினோதமான முறையில் கடத்த முயன்ற 6 பேர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நேற்று (2026 ஜூன் 17, புதன்கிழமை) அரங்கேறியுள்ளது. ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல் மூலம் இந்தியாவுக்குத் தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், காங்கேசன்துறைச் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையிலேயே இந்த பாரிய கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினம் நோக்கிப் புறப்படவிருந்த சிவகங்கை கப்பலில் பயணிப்பதற்காக 146 பயணிகள் தயாராக இருந்தனர். சோதனைகளின் போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த இரண்டு இந்தியப் பிரஜைகளின் உடைமைகளைச் சோதித்ததில், அவர்களிடம் இருந்து தலா 100 கிராம் எடையுடைய தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து அவர்கள் இருவரும் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் 9 இலங்கையர்கள் மற்றும் 17 இந்தியர்கள் என மொத்தம் 26 பேர் தனியாகப் பிரிக்கப்பட்டுச் சுங்கத்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டனர். இவர்களைத் தவிர்த்து ஏனைய 118 பயணிகள் இந்தியா நோக்கிப் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 26 பேரும் தங்கத்தைத் தங்களது உடலினுள்ளே விழுங்கிக் கடத்த முயன்றிருக்கலாம் என்ற பலத்த சந்தேகத்தில், அவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த அதிகாரிகள் தீர்மானித்து முதற்கட்டமாக நேற்று புதன்கிழமை இரவு 26 பேரில் 17 பேர் பலத்த பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு எக்ஸ்ரே (Scanning) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த 17 பேரில் இரண்டு இலங்கை நாட்டைச் சேர்ந்த பெண்கள் மற்றும் நான்கு இந்திய ஆண்கள் என மொத்தம் 6 பேர் தங்கக் கட்டிகளை விழுங்கியிருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதியாகக் கண்டறியப்பட்டுள்ளது. உடலினுள் உள்ள தங்கக் கட்டிகளை மருத்துவ முறைகள் மூலம் பாதுகாப்பாக வெளியே எடுப்பதற்கான விசேட சிகிச்சைகள் யாழ். போதனா வைத்தியசாலையில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சிய 9 பயணிகளுக்கான எக்ஸ்ரே மற்றும் ஸ்கானிங் பரிசோதனைகள் இன்றைய தினம் (வியாழக்கிழமை) யாழ். போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படவுள்ளதாகச் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#KKStoNagapattinam #GoldSmugglingSL #JaffnaTeachingHospital #SivagangaiFerry #SriLankaCustoms


