Home இலங்கைகுறிகாட்டுவான் சுற்றுவட்டத்தில் நாகபூசணி அம்மன் சிலை:

குறிகாட்டுவான் சுற்றுவட்டத்தில் நாகபூசணி அம்மன் சிலை:

by admin

 

யாழ்ப்பாணம், புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவான் இறங்குதுறைச் சுற்றுவட்டப் பகுதியில் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் சிலையை வைப்பதற்கான உத்தியோகபூர்வத் தீர்மானம் வேலணைப் பிரதேச சபையில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணைப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (2026 ஜூன் 17, புதன்கிழமை) சபை மண்டபத்தில் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற போதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குறிகாட்டுவான் இறங்குதுறைச் சுற்றுவட்டத்தில் தீவகத்தின் வரலாற்றுப் பெருமையைப் பறைசாற்றும் வகையில் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மனின் சிலை வைக்கப்பட வேண்டும் என்ற முன்மொழிவைச் சபை உறுப்பினர் சிவகுமாரன் சமர்ப்பித்தார். இதற்குப் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இம்முன்மொழிவுக்குத் தேசிய மக்கள் சக்தியின் (NPP) உறுப்பினர்கள் தமது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர். நயினாதீவு என்பது ஒரு சர்வதேசச் சுற்றுலாத் தளம் என்பதால், அங்குத் தனியொரு மதத்தின் அடையாளத்தை மாத்திரம் காட்சிப்படுத்துவது பொருத்தமற்றது. நயினாதீவில் நான்கு மதங்களைச் சேர்ந்த மக்களும் வாழ்வதுடன், அனைத்து மதங்களைச் சார்ந்த சுற்றுலாப் பயணிகளும் இங்கு வருகை தருகின்றனர்.எனவே, நான்கு மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கூட்டுச் சின்னம் அல்லது தீவகத்தின் பொதுவான அடையாளம் ஒன்றையே அங்கு நிறுவ வேண்டும் என அவர்கள் வாதிட்டனர்.

தேசிய மக்கள் சக்தியின் இந்த மாற்றுப் பரிந்துரையைக் கண்டித்து, ஏனைய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடுமையான வாதங்களை முன்வைத்ததால் சபையில் பெரும் பரபரப்பும் வாக்குவாதமும் ஏற்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சேபனைகளையும் கடந்து, சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் நாகபூசணி அம்மன் சிலையையே நிறுவ வேண்டும் என்பதில் உறுதியாக நின்றனர்.

இறுதி வாக்கெடுப்பு மற்றும் விவாதங்களின் அடிப்படையில், அம்மன் சிலையை வைப்பதற்கான தீர்மானம் சபையில் முறைப்படி நிறைவேற்றப்பட்டது.  இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, சிலை அமைப்பதற்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனத் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் சபையில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

#KurikattuwanRoundabout  #VelanaiPradeshiyaSabha #NainativuAmmanStatue  #JaffnaPolitics #NPP_SriLanka

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More