52
திருகோணமலை கடற்படை முகாமிற்குள் ‘கன் சைட்’ (Gun Site) எனும் பெயரில் நீண்டகாலமாக இயங்கி வந்த மிகவும் இரகசியமான நிலத்தடி சிறைச்சாலை வளாகத்தை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் சீல் வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
சுமார் 60-க்கும் மேற்பட்ட நபர்களை இவ்விடத்தில் சட்டவிரோதமாக தடுத்து வைத்து, கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியதோடு, அவர்களிடம் கப்பம் வசூலித்ததாகவும் நீண்டகாலமாக நடைபெற்று வரும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்தில் தற்போது விசாரிக்கப்பட்டு வரும் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தவிர, மேலும் பலர் இங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்கான ஆதாரங்களும் இப்போது வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிலரும், அதனுடன் தொடர்புடைய தரப்பினரும் நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலங்களை வழங்க முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலத்தடிச் சிறைச்சாலை வளாகத்தை திருகோணமலை நீதவான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
புலனாய்வுப் பிரிவினரின் இந்த நடவடிக்கை, போருக்குப் பிந்தைய இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்குத் தொடர்புடைய சித்திரவதை, கடத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில் தீர்க்கமானதொரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. மேலும் பலர் இங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்கான ஆதாரங்களுடன் கூடிய தகவல்கள் தொடர்ந்தும் வெளியாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் (UN) மனித உரிமைகள் குழுவினரும் முன்னதாக இந்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love

