35
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயரான அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்களை , திருத்தந்தை 14ஆம் லியோ நேற்று (ஜூன் 29) அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளார். இதனுடன், தற்போதைய யாழ். ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசத்தின் ஓய்வு விண்ணப்பத்தையும் திருத்தந்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.
1966 செப்டம்பர் 23ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்த பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம், தத்துவக் கல்வியை யாழ்ப்பாணத்தின் புனித பிரான்சிஸ் சேவியர் பெரிய குருமடத்திலும், இறையியலை கண்டி தேசிய குருமடத்திலும் பயின்றார். பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டமும், ஐக்கிய இராச்சியத்தின் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் முதுகலைப் பட்டமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
2000ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் திகதி குருத்துவ திருநிலைப்படுத்தலை பெற்ற அவர், கொழும்பு மறைமாவட்டத்தில் கல்வி, ஆன்மிகம் மற்றும் நிர்வாகத் துறைகளில் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். 2020ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் திகதி மறைந்த திருத்தந்தை Pope Francis அவர்களால் கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயராக நியமிக்கப்பட்டு, அதே ஆண்டு ஓகஸ்ட் 29ஆம் திகதி ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
மேலும், 2024ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகராகவும், 2025ஆம் ஆண்டு இலங்கை ஆயர் மாநாட்டின் பொதுச்செயலாளராகவும் பணியாற்றி வந்த அவர், இப்போது யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் ஆன்மிகத் தலைவராக பொறுப்பேற்கிறார்.
Spread the love

