கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), எதிர்வரும் ஜூலை மாதம் 13 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் T-56 ரகத் துப்பாக்கிகளால் ஐந்து நபர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத் தொடர் தொடர்பாக, சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட இரு சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) கடந்த ஜூன் 15 ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
இவ்வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த நீடிப்பு உத்தரவைப் பிறப்பித்தார். இந்த ஐந்து மனிதக் கொலைச் சம்பவங்களின் மூன்றாவது சந்தேகநபராக சிவநேசத்துரை சந்திரகாந்தன் பெயரிடப்பட்டுள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சி. ரவீந்திரநாத் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான், தற்போது கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Pillayan #SivanesathuraiChandrakanthan #BatticaloaMagistratesCourt #RemandExtension #CriminalInvestigationDepartment #CID #Batticaloa

