Home இலங்கைதிருக்கோவில் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை வழக்கு: இனியபாரதி மட்டக்களப்பு சிறையில் விளக்கமறியல்!

திருக்கோவில் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை வழக்கு: இனியபாரதி மட்டக்களப்பு சிறையில் விளக்கமறியல்!

by admin
திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் உள்ளிட்ட 6 மனிதப் படுகொலைகள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் (ரி.எம்.வி.பி) அம்பாறை மாவட்டப் பொறுப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ‘இனியபாரதி’ என அழைக்கப்படும் கே. புஷ்பகுமாரை, எதிர்வரும் 8ஆம் திகதி வரை மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் இன்று (02) வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ஒரு வருடகாலமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவரை, சிஐடியினர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் முன்நகர்வுப் பத்திரம் மூலம் வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தினர் இவரை பயங்கரவாதத் தடைச் சட்டத்திலிருந்து விடுவித்துள்ளதாக நீதிமன்றுக்கு அறிவித்தனர். இதையடுத்தே, நீதவான் இவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
பின்னணி: 2007ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் திகதி, திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார், விநாயகபுரத்திலுள்ள தனது இல்லத்திலிருந்து பிரதேச சபையை நோக்கிச் பயணித்தபோது, விநாயகபுரம் – கோரக்களப்பு வீதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். 2005 – 2009 காலப்பகுதியில் அம்பாறை, திருக்கோவில் பகுதிகளை மையமாகக் கொண்டு இடம்பெற்ற 6 மனிதப் படுகொலைகளுடன் இனியபாரதி தொடர்புடையவர் என சிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.
உதயகுமாரின் மனைவி 2025ஆம் ஆண்டு சிஐடியிடம் மீண்டும் முறைப்பாடு செய்ததையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் 2025 ஜூலை 6ஆம் திகதி இனியபாரதியும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலனும் திருக்கோவிலிலும் மட்டு சந்திவெளியிலும் கைது செய்யப்பட்டிருந்தனர். 2005-2009 காலப்பகுதியில் திருக்கோவில், விநாயகபுரம் பகுதிகளில் பலர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பாகவும் காணாமல் போனோரின் உறவினர்கள் இவர் மீது நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More