51
யாழ்ப்பாணத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் ஆள்கொணர்வு மனு மீதான விசாரணை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் மீண்டும் பெப்ரவரி, ஜூன் மாதங்களைத் தொடர்ந்து அண்மையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் முக்கிய சாட்சியாளராகக் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் முன்னாள் சிறிலங்கா ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ச, பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி யாழ்ப்பாணம் நீதிமன்றிற்கு நேரில் சமூகமளிக்க முடியாதெனத் தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்தார். இதனையடுத்து, அவர் நிகழ்நிலை (Online) ஊடாகச் சாட்சியமளிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
கடந்த ஜூன் 19ஆம் திகதி நடைபெற்ற விசாரணையின் போது, கொழும்பில் உள்ள பிரதான நீதிமன்றம் ஒன்றில் கோட்டாபய ராஜபக்ச நேரில் முன்னிலையாகி, அங்கிருந்தவாறு யாழ். நீதவான் முன்னிலையில் நிகழ்நிலை ஊடாகச் சாட்சியமளிக்க வேண்டும் என நீதிமன்றம் கட்டளையிட்டிருந்தது. அத்துடன், அவர் முன்னிலையாகக்கூடிய கொழும்பு நீதிமன்ற விபரம் மற்றும் அதற்கு ஏதுவான மூன்று திகதிகளை மன்றுக்கு அறிவிக்குமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கு அண்மையில் (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கொழும்பு நீதிமன்றில் சாட்சியமளிப்பதற்கான முறையான திகதியைப் பெற்றுக் கொள்வதற்கும், சாட்சியப் பதிவுகளுக்கான மொழிபெயர்ப்பு உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட மேலதிக உத்தியோகஸ்தர்களின் ஒழுங்கமைப்புகளை மேற்கொள்வதற்கும் கால அவகாசம் தேவைப்படுவதாகக் சுட்டிக்காட்டப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை எதிர்வரும் ஓகஸ்ட் 07ஆம் திகதிக்கு ஒத்திவைத்துத் திகதியிட்டுள்ளது.
பின்னணி:
கடந்த 2011ஆம் ஆண்டு டிசெம்பர் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைத் திரட்டிப் பாரிய போராட்டமொன்றை நடத்த லலித் மற்றும் குகன் ஆகியோர் திட்டமிட்டிருந்தனர்.
இப்போராட்டத்திற்கு முதல் நாள், அதாவது டிசெம்பர் 09 அன்று யாழ். ஆவரங்கால் பகுதியில் வைத்து இவ்விருவரும் சிவில் உடையில் வந்த இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டனர்.
இவர்களின் விடுதலைக்காகவும் உண்மை நிலையைக் கண்டறியவும் 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே, 2017இல் சாட்சிகள் பட்டியலில் இணைக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்சவிடம் சாட்சியம் பெற நீதிமன்றம் பல வருடங்களாக முயன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love

