Home இலங்கை120 மில்லியன் ரூபா லஞ்ச விவகாரம்: முன்னாள் நீதியமைச்சரின் துபாய் பயணம் குறித்து விசாரணை!

120 மில்லியன் ரூபா லஞ்ச விவகாரம்: முன்னாள் நீதியமைச்சரின் துபாய் பயணம் குறித்து விசாரணை!

by admin
பாதாள உலகக் குழுத் தலைவரான “ஹரக் கட்டா” என்பவரை காவற்துறையின் தடுப்புக் காவலிலிருந்து பாதுகாக்கவும், பூசா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றுவதைத் தடுக்கவும் அவரது மனைவியிடமிருந்து 120 மில்லியன் ரூபாயை லஞ்சமாகப் பெற்றதாக மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஹொரண தொகுதி முன்னாள் அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் அருண ஸ்ரீ சனத்குமார ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, எதிர்வரும் ஜூலை 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 2023 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி ஒரே விமானத்தில் துபாய் சென்று, அங்கு வைத்து “ஹரக் கட்டா”வின் மனைவியான மதுஷிகா மதுவந்தியைச் சந்தித்து முதற்கட்டமாக 500 மில்லியன் ரூபா லஞ்சம் கோரியதாகவும், பின்னர் அது குறைக்கப்பட்டு 120 மில்லியன் ரூபா முன்பணமாகப் பெறப்பட்டதாகவும் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு (CIABOC) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இவ்விசாரணைகளின் போது, சந்தேகநபர்கள் துபாய்க்குச் சென்ற அதே காலப்பகுதியில், அதாவது 2023 மார்ச் 21 முதல் 28 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் துபாயில் தங்கியிருந்தமை குடிவரவு குடியகல்வு திணைக்கள ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், இந்த லஞ்ச விவகாரத்தில் அவருக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தற்போது விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேலும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் லஞ்சப் பணத்தை திரும்பக் கோரியபோது, அதில் 20 மில்லியன் ரூபா பணம் நுவரேலியா வீதி, நாவல பகுதியில் உள்ள விஜயதாச ராஜபக்சவுக்குச் சொந்தமான இல்லத்தில் வைத்தே இடைத்தரகரான லசந்த மஞ்சுள சில்வா என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் ஆணைக்குழுவின் உதவி சட்டப் பணிப்பாளர் அனுஷா சமந்தபெரும தெரிவித்துள்ளார்.
‘உண்டியல்’ முறை மூலம் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டுள்ள இப்பணம் மற்றும் சந்தேகநபர்களின் வாட்ஸ்அப் (WhatsApp) உரையாடல்கள் குறித்து மேலதிக தடயவியல் சோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More