58
பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியில் சர்வதேச வணிகக் கப்பல்களின் பாதுகாப்பிற்கு ஈரான் அச்சுறுத்தல் விளைவிப்பதாகக் குற்றம் சாட்டி, அமெரிக்க இராணுவம் ஈரானின் தெற்கு கடற்கரை நகரங்களிலுள்ள இராணுவ உள்கட்டமைப்புகள் மற்றும் ஏவுகணைச் சேமிப்புக் கிடங்குகளை இலக்கு வைத்து கடந்த இரண்டு நாட்களாகக் கடுமையான வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.
இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க இராணுவத் தளங்களைக் கொண்டுள்ள அண்டை நாடுகளான குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் தனது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரானின் இந்தத் திடீர் ஏவுகணைத் தாக்குதல்களைத் தங்களது வான்பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளதாகக் குவைத் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதி ஒன்றில் ஈரானின் ஏவுகணை விழுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தாக்குதல்களால் வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முற்றிலுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தும் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.
Spread the love

