நாச்சியார் படத்தில் கெட்ட வார்த்தை பயன்படுத்தியமை குறித்து ஜோதிகா வேதனை தெரிவித்துள்ளார். இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள நாச்சியார் படத்தில் ஜோதிகா காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் டீஸரில் ஜோதிகா கெட்ட வார்த்தை பேசியிருந்தார். டீஸரில் வந்தது ஒரேயொரு வசனம் தான் அதுவும் ஜோதிகா பேசிய கெட்ட வார்த்தை. அந்த கெட்டவார்த்தையால் பெரும் சர்ச்சை கிளம்பியிருந்தது. இதனை அடுத்து படத்தை பார்த்துவிட்டு பேசுங்கள். டீஸரை பார்த்துவிட்டு தனது கதாபாத்திரம் குறித்து ஒரு முடிவுக்கு வராதீர்கள் என ஜோதிகா ரசிகர்களை கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து ஜோதிகா மீண்டும் பேசியுள்ளார். ஒரு நடிகை அந்த வார்த்தையை பேசியதால் தான் பெரும் சர்ச்சையானது எனவும் அதுவே ஒரு நடிகர் பேசியிருந்தால் யாரும் கண்டுகொண்டிருக்க மாட்டார்கள் எனவும் ஜோதிகா வருத்தம் தெரிவித்துள்ளார்.
படத்தில் தனது கதாபாத்திரம் மற்றும் சூழல் காரணமாக அந்த வார்த்தையை பயன்படுத்தியதாகவும் படத்தினை பார்த்தால் தான் அந்த வார்த்தையை பயன்படுத்தியது சரி என்பது ரசிகர்களுக்கு புரியும் எனவும் ஜோதிகா தெரிவித்துள்ளார்.
நாச்சியார் படம் எதிர்வரும் வரும் 16ம் திகதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் டீஸரால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது