தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி பொது மக்கள் படுகொலைக்கு எதிராகவும், வேதாந்தா தாமிர உருக்காலையை மூடக் கோரியும் உலகெங்கிலும் போராட்டம் நடந்து வருகிறது. லண்டனில் நடந்த போராட்டத்தை தொடர்ந்து வேதாந்தா நிறுவனத்தை லண்டன் பங்கு சந்தையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் குரல் கொடுக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவிலும் இது போன்ற போராட்டங்கள் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் முன் சுமார் 200 பேர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும், பொதுமக்கள் படுகொலைக்கு நீதி கோரியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் முடிவில் மக்கள் கையெழுத்திட்ட மனு இந்திய தூதரக அதிகாரி வெங்கட்டிடம் அளிக்கப்பட்டது. மக்களின் உணர்வுகளை இந்திய அரசுக்கு தெரிவிப்போம் என்று அவர் உறுதி அளித்தார். இதேவேளை சிலிக்கன் வேலியை சேர்ந்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ரோ கன்னாவும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை சர்வதேச பிரச்சனை என குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.