குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஐக்கிய தேசியக் கட்சியின் சிலருக்கு அமைச்சு மற்றும் பிரதி அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில், மீண்டுமொரு சிறிய மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதெனத் தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரை, அமைச்சரவைக்குள் உள்ளீர்த்துக்கொள்ளும் வகையிலேயே, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்போது, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளன என்றும், அந்தத் தகவல் தெரிவிக்கின்றது. இம்மாற்றத்தின் போது, முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட அறுவருக்கே பதவிகள் வழங்கப்படவுள்ளன என்றும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தன்னுடைய தனிப்பட்ட விஜயத்தை முடித்துகொண்டு நாடு திரும்பிய பின்னர், அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று இடம்பெற்ற சந்திப்பின்போது, இது தொடர்பில் வெகுவாகக் கலந்துரையாடப்பட்டதாகவும் அதற்கு, ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளாரென்றும் அறியமுடிகின்றது.