பேய்,பிசாசு,பில்லி,சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளுக்கு 7 ஆண்டு தண்டனை விதிக்கும் அசாம் மாநில சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். அசாம் மாநிலத்தில் பேய்,பிசாசு, பில்லி, சூனியத்தில் மக்களுக்கு உள்ள மூடநம்பிக்கை அதிகமாக உள்ளதனால் பலர் கொல்லப்படுவதாகவும், சூனியம் வைத்து கொன்றதாக சில மந்திரவாதிகளை உள்ளூர் மக்கள் அடித்தும், எரித்தும் கொல்வதும் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக கடந்த 2001-2017-ம் ஆண்டுகளுக்கு இடையில் 114 பெண்களும், 79 ஆண்களும் படுகொலை செய்யப்படடுள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இத்தகைய மூடநம்பிக்கைகளால் மேற்கொள்ளப்படும் கொலைகளுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டு சிறை தண்டனையுடன் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் சட்ட மசோதா 2015 ஆம் ஆண்டு அசாம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா ஆளுனர்; மூலம் ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டநிலையில், கடந்த மூன்றாண்டுகளாக கிடப்பில் இருந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த யூன் மாதம் 13ம் திகதி ஒப்புதல் அளித்துள்ளதாக ஜனாதிபதி மாளிகையின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.