196
ஜனநாயகத்தைத் தழைக்கச் செய்வதற்காக உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் கொண்டு வரவுள்ள புதிய அரசியலமைப்பு நாட்டின் அரசியல் போக்கைப் புதிய பாதையில் கொண்டு செல்ல உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நடைமுறையில் உள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றியமைப்பது, புதிய தேர்தல் முறையைக் கொண்டு வருவது, நாடு எதிர்நோக்கியுள்ள எரியும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது என்ற மூன்று விடயங்களை உள்ளடக்கியதாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு அந்நியரிடமிருந்து சுதந்திரமடைந்ததில் இருந்து பிரச்சினைகளையே வாழ்க்கையாகக் கொண்டுள்ள சிறுப்பான்மையினராகிய தமிழ் முஸ்லிம் மக்கள் எதிர் நோக்கியுள்ள அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு புதிய அரசியலமைப்பு வழிவகுக்கும் – வழி வகுக்க வேண்டும் என்பது அந்த மக்களின் ஆவலாகும்.
அதிகாரங்களை இறைமையுடன் கூடிய உரிமையாகப் பங்கிட்டுக் கொள்வது என்ற அடிப்படையில் தமது அரசியல் உரிமைகள் தாயகப் பிரதேச உரிமை சார்ந்து நிலை நிறுத்தப்படுவதற்கும், அவற்றைத் தாங்களே சுதந்திரமாக நடைமுறைப்படுத்திக் கொள்வதற்கும் புதிய அரசியலமைப்பில் வழி காணப்பட வேண்டும் என்பது விசேடமாக தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
இலங்கையின் வரலாற்றில் பல அரசியலமைப்புக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. எந்தவொரு அரசியலமைப்பும் நாட்டில் உள்ள பொதுமக்களின் பங்களிப்புடன் அவர்களுடைய ஆலோசனைகளையும் பெற்று உருவாக்கப்பட்டதாக வரலாறில்லை.
இந்த நிலைமையை மாற்றி, புதிய அரசியலமைப்பை நாட்டு மக்களின் பங்களிப்புடன், அவர்களுடைய அபிலாசைகள், கருத்துக்கள், எதிர்பார்ப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கியதாகப் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று இந்த அரசாங்கம் முனைந்திருக்கின்றது.
அரசியலமைப்பு உருவாக்க வரலாற்றில் முதற் தடவையாக பெருமளவிலான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற தமிழ் மக்களின் கருத்துக்கள் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. அதேபோன்று அரசியல் கட்சிகளினதும் கருத்துக்கள் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படவுள்ளன.
முன்னைய அரசியலமைப்புக்களை உருவாக்கியபோது, தமிழ்த் தலைவர்கள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பில் முன்வைத்த கருத்துக்கள், ஆலோசனைகள் என்பன அரச தரப்பினரால் கவனத்திற் கொள்ளப்படவில்லை. அவைகள் கிடப்பில் போடப்பட்டு, தாங்கள் விரும்பிய வகையிலேயே முன்னைய அரசியலமைப்புக்களை அவ்வப்போது ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் உருவாக்கினார்கள்.
இதனால் தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டதாகவும், தமது அரசியல் உரிமைகளை அவர்கள் நிலைநாட்டிக் கொள்ள முடியாத ஒரு மோசமான நிலைமை ஏற்பட்டிருந்ததாகவும் குற்றஞ் சாட்டப்பட்டு வந்தது.
இந்த நிலைமையினால் ஆட்சி முறைமையிலும், அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் செயற்படுத்தலிலும், தமது பிரதேசங்களில் தமக்குரிய அரசியல் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ளவோ, தமக்கு அவசியமானவற்றைப் பெற்றுக்கொள்ளவோ முடியாத அவல நிலைமை ஏற்பட்டிருந்ததாக தமிழர் தரப்பில் ஆதங்கம் வெளியிடப்பட்டு வருகின்றது.
எனினும் மோசமான முப்பது வருட யுத்தத்தின் பின்னர், யுத்தத்தை வெற்றிகொண்ட அரசாங்கம் புதியதோர் அரசியல் சகாப்தத்திற்குள் அடியெடுத்து வைத்த போதிலும், சிறுபான்மை இன மக்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தவதற்கோ அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கோ முயற்சிக்கவில்லை.
மாறாக அவர்களுடைய பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் அவர்கள் மீதான இராணுவ ஆதிக்கம் மிகுந்த ஆட்சி நடைமுறையையே செயற்படுத்தி வந்தது.
இதனால் யுத்த மோதல்கள் முடிவுக்கு வந்ததன் பின்னர் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு காணும், எனவே பட்டது போதும். இனிமேலாவது நிம்மதியாக வாழலாம் என்ற – யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பும் ஆவலும் இலவுகாத்த கிளியைப் போலானது.
இத்தகைய ஒரு நிலையிலேயே ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் கொண்டு வரவுள்ள புதிய அரசியலமைப்பு தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு வழிவகுக்கும் என்ற எதிர்பார்ப்பு அந்த மக்களிடம் அதிகமாகவே காணப்படுகின்றது.
ஆயினும் இந்த எதிர்பார்ப்பானது, நாட்டின் நடைமுறை அரசியல் செயற்பாடுகளில் ஐயப்பாடுகள் மிகுந்த ஒன்றாகவே காணப்படுகின்றது.
ஏமாற்றம் கலந்த எதிர்பார்ப்பு
புதிய அரசியலமைப்பின் ஊடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அல்லது உறுதியளிக்கப்பட்டுள்ள போதிலும், தங்களுடைய எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றத்தில் முடிந்துவிடுமோ என்ற அரசியல் அச்சமும் தமிழர் தரப்பில் இருக்கத்தான் செய்கின்றது.
தமிழ் மக்கள் தமது தாயகப் பிரதேசமாகிய வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு சுயநிர்ணய அடிப்படையில் இறைமையுடன் கூடிய பிராந்திய ஆட்சி உரிமையை எதிர்பார்த்திருக்கின்றார்கள். சமஸ்டி முறையிலான ஓர் அரசியல் தீர்வின் மூலம் இதனைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது அவர்களுடைய நம்பிக்கை – எதிர்பார்ப்பாகும்.
ஆனால் நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஒற்றையாட்சி முறைமையின் கீழேயே பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும். சமஸ்டி ஆட்சி முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது அரச தரப்பினரதும், சிங்கள பெரும்பான்மையின அரசியல்வாதிகளினதும் நிலைப்பாடாகும்.
சமஸ்டி முறையிலான தீர்வே வேண்டும் என்றும், சமஸ்டிக்கு நாட்டில் இடமில்லை. ஒற்றையாட்சி முறையிலேயே தீர்வு என்றும் இரு தரப்பினரும் ஏட்டிக்குப் போட்டியாக மிகுந்த உறுதிப்பாட்டோடு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.
ஆயினும் இரு தரப்பினரும் பொதுவானதோர் அரசியல் களத்தில் தமது கருத்துக்களை முன்வைத்து இன்னும் பேச்சுக்களை நடத்தவில்லை. தமது கருத்துக்களின் நியாயங்களை இரு தரப்பினரும் பரிமாறிக் கொள்வதற்கான முயற்சிகளில் இதுவரையில் இறங்கவில்லை.
எனவே, துருவ மயப்பட்ட நிலையில் இருந்து கொண்டு புதிய அரசியலமைப்பில், அதிகாரங்களைகப் பகிர்ந்து கொண்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதா அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்து தீர்வு காண்பதா என்பதில் முடிவு காண முடியுமா என்பது சந்தேகமே.
மீளப் பெற்றுக்கொள்ள முடியாத வகையில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வது சிறுபான்மை இன மக்களுக்கு நன்மை பயப்பதாக அமையும். அதேநேரம் மத்திய அரசாங்கம் அல்லது பெரும்பான்மை இனமக்கள் மீளப் பெற்றுக்கொள்ளத் தக்க வகையில் அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்வது பேரின மக்களுக்கு நன்மையளிப்பதாகிவிடும்.
ஒற்றையாட்சி முறையில், மாகாணங்களுக்குப் பரவலாக்கப்பட்ட அதிகாரங்களை விரும்பிய நேரம், விரும்பியவாறு மீளப் பெற்றுக்கொள்கின்ற நிலைமையே இப்போது காணப்படுகின்றது.
இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அந்த மாற்றம் முன்னேற்றகரமானதாகவும் தங்களுடைய எதிர்பார்ப்புக்களை ந்pறைவு செய்யத்தக்கதாகவும் அமைய வேண்டும் என்பது தமிழ் மக்களுடைய நிலைப்பாடாகும்.
ஆயினும் தமிழர் தரப்பும் சிங்கள அரசியல் தரப்பும் விடாக்கண்டன் கொடாக்கண்டன் நிலையில் இருக்கும்போது, புதிய அரசியலமைப்பின் ஊடாக எவ்வாறு தங்களுக்குரிய அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பதில் ஏமாற்றம் கலந்த எதிர்பார்ப்பிலேயே தமிழ் மக்கள் காணப்படுகின்றார்கள்.
அரசியல் தீர்வு காணும் விடயத்தில் நேருக்கு நேர் முரண்பட்ட நிலைப்பாட்டில் இருக்கின்ற பங்காளிகளான தமிழர் தரப்பையும் சிங்கள அரசியல் தரப்பையும் ஒரு நேர் கோட்டில் கொண்டு வந்து இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, ஆரோக்கியமானதோர் அரசியல் தீர்வை நோக்கி நகர்த்திச் செல்லப்போவது எது அல்லது யார் அவ்வாறு நகர்த்திச் செல்லப் போகி;ன்றார்கள் என்று தெரியவில்லை.
இந்த வருட இறுதிக்குள் தீர்வு காணப்பட்டுவிடும். ஜனாதிபதி மீதும் பிரதமர் மீதும், இருவருக்கும் பின்னணியில் அரசியல் செயற்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கின்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா மீதும் நம்பிக்கை இருக்கின்றது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தீர்வு காணப்பட்டுவிடும் என்று மந்திரத்தில் மாங்காயை விழுத்த முடியும் என்ற போக்கில் செல்வது அரசியல் ஆரோக்கியம் மிக்க செயற்பாடாகத் தெரியவில்லை.
இந்தச் சூழ்நிலையிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து, ஆழமான சிந்தனைக்குரிய உடனடி செயற்பாடுகளை வலியுறுத்துகின்ற கருத்துக்கள் வவுனியாவில் வெளிப்பட்டிருக்கின்றன.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம்: கவலைகளும் கரிசனைகளும்
இது கால வரையிலும் தங்களுடைய ஆலோசனைகள் கவனத்திற் கொள்ளப்படாமலேயே அரசியலமைப்புக்கள் உருவாக்கப்பட்டன என்று அங்கலாய்த்து வந்த தமிழர் தரப்புக்கு இப்போது அவர்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொள்வதற்குரிய ஆலோசனைகளை முன்வைப்பதற்குரிய சந்தர்ப்பம் கிட்டியிருக்கின்றது.
இந்த சந்தர்ப்பமானது மிகவும் முக்கியமானது – பொறுப்பு வாய்ந்தது என்று அரசியல் ஆய்வாளர்களும், அரசியல் தலைவர்களும் தமிழ் மக்களுக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றார் கள்.
இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பமாகும். இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால், தமிழ் மக்களின் பங்களிப்போடு – அவர்களுடைய சம்மதத்தோடு கொண்டு வரப்பட்டதே புதிய அரசியலமைப்பு என்று அரச தர்பபினரும் தமிழ் மக்கள் மீதே பொறுப்பை சுமத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
புதிய அரசியலமைப்பை உருவாக்குகின்ற சந்தர்ப்பமானது, தமிழ் மக்கள் தமது எதிர்கால அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கப் போகின்ற மிகவும் முக்கியமான காலகட்டமாகும்.
எனவே எதிர்வருகின்ற மாதங்கள் மிகவும் முக்கியமானவை. தமிழ் மக்கள் மிகுந்த அவதானத்தோடு செயற்பட வேண்டிய காலகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கின்றது.
முன்னணி அரசறிவியல் வரலாற்று ஆய்வாளர் என வர்ணிக்கப்படும் மு.திருநாவுக்கரசு எழுதிய இலங்கை அரசியல் யாப்பு – டொனமூர் யாப்பு முதல் உத்தேச சிறிசேன யாப்பு வரை – (1931 – 2016) என்ற நூல் வவுனியாவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில், வவுனியா தமிழ்ச்சங்கத்தினால் அண்மையில் வெளியிடப்பட்டது.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் கருத்துரைக்கப்பட்ட போதே இந்த எச்சரிக்கையும் கருத்துக்களும் வெளியிடப்பட்டன.
ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு கருத்துரையாற்றிய இந்த நிகழ்வில் புதிய அரசியலமைப்பின் முக்கியத்துவம், அதில் தமிழ் மக்களுக்குரிய பங்களிப்பு என்பவை குறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டும். விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
புதிய அரசியலமைப்பானது பலதரப்பட்டவர்களுடைய ஆலோசனைகளையும் பெற்று உருவாக்கப்பட்ட பின்னர், அது நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெற வேண்டும். அவ்வாறு பெற்ற பின்னர். அது நாட்டு மக்களின் சர்வசன வாக்கெடுப்புக்கு விடப்படும். அப்போது அதனை ஆதரிப்பதா இல்லையா என்பதைத் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் சர்வசன வாக்கெடுப்பின் போது தனது ஒற்றை வாக்கின் மூலம் தீர்மனிக்க வேண்டியிருக்கும்.
இந்தத் தனிமனித தீர்மானமானது, தனிப்பட்ட நிலையிலும் தமிழர் தரப்பு சார்ந்த நிலையிலும், சரியானதோர் அரசியலமைப்புக்கு, – வாக்களிப்பின் மூலம் ஆதரவளிக்கப்பட்டிருக்கின்றதா அல்லது பிழையானதோர் அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கப்பட்டிருக்கின்றதா என்பதைத் தீர்மானிப்பதாக அமையும்.
இத்தகையதொரு நிலையில் தமிழ் மக்கள் புதிய அரசியலமைப்பு தொடர்பில் தெளிவான விளக்கத்தைக் கொண்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது.
அறிஞர்களும் அரசியல்வாதிகளும் கூறுவது போன்று சாதாரண மக்கள் இதனை சரியான முறையில் விளங்கிக் கொள்ளமாட்டார்கள். எனவே அது தொடர்பில் அவர்களுக்குத் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அவர்களுக்கு அரசியல் ரீதியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அது நடைபெறவில்லை என்பதும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் சுட்டிக்காட்டப்பட்டது. அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதும் இங்கு வலியுறுத்தப்பட்டது,
அதேநேரம் தமிழ் மக்களின் முக்கிய அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்கால நன்மை குறித்து வெளியிடப்படுகின்ற கருத்துக்களை உள்வாங்குவதில்லை. அவற்றைக் கவனத்திற்கொண்டு செயற்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் இங்கு முன்வைக்கப்பட்டது.
தான்தோன்றித்தனமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை செயற்படுகின்றது என்பதும் இங்கு வழமைபோல காரசாரமாக சுட்டிக்காட்டப்பட்டது.
தமிழ் மக்களின் விவகாரங்களுக்கான அறிஞர் அவையொன்று உருவாக்கப்பட்டிருக்கவில்லை. தமிழர் தரப்பு அரசியல் போக்குகள் எதிர்கால தேவைகள், அவதானம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் என்பன குறித்து காலத்துக்குக் காலம் ஆய்வுகள் நடத்தப்படவில்லை. அவை தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்குரிய களம் உருவாக்கப்படவில்லை என்ற ஆதங்கமும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது .
என்ன நிலைமை?
தமிழர் தரப்பில் வலுவானதோர் அரசியல் தலைமை இல்லை என்பது யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னரான காலப்பகுதியின் கரிசனை மிக்க கவலையாக உள்ளது.
ஆயுத மோதல்கள் நிலவிய யுத்தகாலச் சூழலில் ஆயுத பலமே அரசியல் பலத்தின் அடையாளமாகத் திகழ்ந்தது. அதன் காரணமாக ஆயுத பலத்தைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் வலுவான அரசியல் தலைமைத்துவத்தைக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் அவர்கள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டதையடுத்து, விடுதலைப்புலிகள் வகித்திருந்த பலமான அரசியல் தலைமையை ஈடு செய்யத்தக்கதோர் அரசியல் தலைமை இருக்கவில்லை.
ஆயினும் விடுதலைப்புலிகளின் நிழலில் அரசியல் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தோள்களில் தமிழ் மக்களின் அரசியல் தலைமைப் பொறுப்பு தானாகவே வந்து விழுந்தது.
தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக வலுவானதொரு நிலையில் விடுதலைப்புலிகள் இருந்த போதிலும், தமக்கென ஓர் அரசியல் துறையைச் செயற்படுத்தி அதற்கான தலைமையைக் கொண்டிருந்த போதிலும், நாடாளுமன்ற அரசியலுக்கு தமிழ்;த்தேசிய கூட்டமைப்பே ஒரு கருவியாகச் செயற்பட அவர்கள் அனுமதித்திருந்தார்கள்.
அந்த வகையில் நாடாளுமன்ற அரசியல் தலைமைப் பொறுப்பில் இருந்து வந்த தமிழ்ததேசிய கூட்டமைப்பு, விடுதலைப்புலிகளின் மறைவைத் தொடர்ந்து இயல்பாகவே தமிழ் மக்களின் அரசியல் தலைமைப் பொறுப்பை ஏற்கவேண்டியதாயிற்று.
ஆயினும் இந்த அரசியல் பொறுப்பை வலுவுள்ளதாகவோ அல்லது காலத்தின் அரசியல் சவால்களை எதிர்கொள்ளத்தக்கதாகவோ கட்டி வளர்ப்பதற்கு கூட்டமைப்பின் தலைமை முயலவில்லை. மாறாக கட்சி அரசியலின் மாயைக்குள் அது புதைந்து போனது.
ஆனாலும், தமிழ் மக்கள் விடுதiலைப்புலிகளின் காலத்தில் இருந்தே தமிழத்தேசிய கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்குத் தேர்தல்களில் வாக்களித்து வாக்களித்து பழகிப் போனதாலும், தமது இனம் சார்ந்த வலுவான அரசியல் உணர்வு காரணமாகவும் அவர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைமப்பின் பின்னாலேயே அணி திரண்டிருந்தார்கள்.
கூட்டமைப்பின் தலைமை மக்கள் ஒற்றுமையாக கூட்டமைப்பின் பின்னால் அணி திரள வேண்டும் என்று தேர்தல் காலத்தில் வலியுறுத்த, பல கட்சிகளின் கூட்டாகத் திகழும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் கட்சித் தலைவர்களிடையே ஏற்பட்ட அரசியல் பிணக்குகளை அவர்கள் பெரிதுபடுத்தாமல், அனைவரும் கூட்டமைப்பில் இணைந்து ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்கள்.
தலைவர்கள் கூறிய ஒற்றுமையை மக்கள் கடைப்பிடித்து வருகின்றார்கள். ஆனால் மக்கள் வலியுறுத்துகின்ற கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமையை கூட்டமைப்பு கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை.
இந்த நிலைமையானது, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தமிழ் மக்களின் காத்திரமான பங்களிப்பையும் பாதிக்கச் செய்யக்கூடும் என்ற அச்சம் எழுந்திருக்கின்றது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் ஆலோசனைகளை கூட்டமைப்பின் தலைமை கவனத்திற் கொள்வதில்லை. அவற்றுடன் முக்கிய விடயங்கள் குறித்து மனம் திறந்து கலந்துரையாடி ஜனநாயக ரீதியில் முடிவுகளை மேற்கொள்வதோ அரசியல் காரியங்களை முன்னெடுப்பதோ கிடையாது.
இதனால், கூட்டமைப்பின் தலைமை என்ன செய்கின்றது என்ன விதமான கொள்கைப் போக்கில் சென்று கொண்டிருக்கின்றது என்பது ஏனைய கட்சிகளின் தலைவர்களுக்கும் உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியாமல் இருக்கின்றது.
இந்த இரட்டை நிலை போக்கானது, தமிழ் மக்களின் இறுக்கமான அணிசார்ந்த நிலைப்பாட்டிற்கும் செயற்பாட்டிற்கும் பாதகமான நிலைமையையே ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்த நிலையில் புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்கள் எதிர்பார்த்திருக்கின்ற தங்களுக்கான சரியான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு வழி பிறக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
Spread the love