நாடளாவிய ரீதியில் சிங்கள மக்கள் பெரும்பான்மை இனத்தவர்களாக இருந்தாலும் சிறுபான்மை இனத்தவர்களான தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேர்தல்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் என முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் எவர்? என்ற கேள்விக்கு விரைவில் பதில் தெரியவரும். மூவின மக்களையும் நாட்டையும் பாதுகாக்கக்கூடிய ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவார்.
ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் கைகோர்க்க தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் தயாராகவுள்ளனர். அவர்களுடன் தமது சக உறுப்பினர்கள் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் வேட்பாளராக எவர் களமிறங்கினாலும் அது எமக்குச் சவால் அல்ல என மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
சிறுபான்மை இன மக்களும் தமக்கே ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. நாடளாவிய ரீதியில் சிங்கள மக்கள் பெரும்பான்மை இனத்தவர்களாக இருந்தாலும் சிறுபான்மை இனத்தவர்களான தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேர்தல்களின் வெற்றியைத் தீர்மானிக்கும்.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் கடும் போட்டி நிலவக்கூடும் என பலர் கருதுகின்றனர். எனினும், இந்த இரு தேர்தல்களிலும் மூவின மக்களின் ஆதரவுடன் தமது வெற்றி உறுதிப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கக்கூடிய வாய்ப்புக்களைக் கொண்டிருப்பவர் என்று கருதப்படும் கோத்தாபய ராஜபக்ஸ, சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் தேர்தலில் வெற்றிபெற முடியும் என கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், மகிந்த ராஜபக்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .