தெளிவான சட்டத்தை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா விளங்கிக் கொள்ளவில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.வடக்கு மாகாணத்திற்கு இரு நியதிச் சட்டங்களை ஆளுநர் உருவாக்கியமை தொடர்பாக வடமாகாண முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர், “ஆளுநர் அதிகாரம் அற்ற செயலை செய்கின்றார்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வட மாகாண ஆளுநர் என்ற வகையில் மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி திட்டங்களுக்காக சட்ட திட்டங்களை உரிய வகையில் நிறைவேற்றுவேன். வரம்பு தெரியாமல் எனக்கு வகுப்பெடுக்கக் கூடாது என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டார்.
இதற்கு பதிலளிக்கும் முகமாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவிக்கையில்,
எனது கருத்திற்கான பதில் கருத்தாக ஆளுநர் அரசியல் அமைப்பின் 154 சியை குறிப்பிட்டார். 154 சி தெளிவாகத்தான் குறிப்பிடுகின்றது. அதனைக்கூட வாசித்து அறிய முடியாத ஒருவர் தான் வடக்கு மாகாணத்திற்கு ஆளுநராக உள்ளார் என்பதனை நினைக்கும்போது வேதனையாகவுள்ளது.
இதேநேரம் நிறைவேற்றுச் செயற்பாட்டிற்கும் சட்டவாக்கச் செயற்பாட்டிற்கும் வித்தியாசம் ஆளுநருக்கு தெரியவில்லை. நிறைவேற்றுச் செயற்பாட்டு அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உரியது. இதனை விளங்காதுள்ளார்.
அதாவது எக்கருமங்கள் தொடர்பில் நியதிச் சட்டங்கள் ஆக்குவதற்கு மாகாண சபை தந்துவமுடையதாக உள்ளதோ அக் கருமங்களை உள்ளடக்குவதான நிறைவேற்றுத் தத்துவமானது அம் மாகாண சபை எம் மாகாணத்திற்கு என ஸ்தாபிக்கப்பட்டதோ அம் மாகாணத்திற்கான ஆளுநரினால் ஒன்றில் நேரடியாகவோ அல்லது அமைச்சர்கள் சபையை சேர்ந்த அமைச்சர்கள் மூலமாகவோ அல்லது அவருக்கு கீழ் அமைந்த அலுவலர்கள் மூலமாகவோ என 154 ஊ எனும் உறுப்புரைக்கு அமைய பிரயோகிக்கப்படுத்த வேண்டும் என்பதே ஆகும்.
எனவே இவை தொடர்பில் வித்தியாசம் தெரியாது மாகாண சபையை கேலிக்கூத்தாக்க வேண்டாம். இலங்கையில் சர்வ நிறைவேற்று அதிகாரம் கொண்டவர் ஜனாதிபதி எனக் கூறினாலும் ஜனாதிபதியினால் கூட ஒரு வரியில் கூட சட்டம் நிறைவேற்றும் அதிகாரம் கிடையாது.
இவ்வாறு இருக்க ஜனாதிபதி நியமிக்கும் ஒரு போடு தடிதான் ஆளுநர். அவருக்கு சட்டம் இயற்ற ஒரு சிறு துளி அதிகாரம் கூடக் கிடையாது எனபதனை அறியாதவர்களை ஆளுநர் பதவியில் இருத்தியதன் விளைவுதான் இது.
இதனால் இவ்வாறு சட்டத்தை இயற்றுகின்றேன் என மாகாணத்தை கேலிக்கூத்தாக்காமல் இருப்பதே மேலானது
மீண்டும் உரைக்கின்றேன். நியதிச் சட்டம் ஒன்றை உருவாக்கும் அதிகாரம் எந்த மாகாண ஆளுநருக்கும் கிடையாது. அவ்வாறு நான் உரைப்பது தவறு எனில் எந்த நீநிமன்றிலும் சந்திக்கவும் தயாராகவே இருக்கின்றேன் என்றார்.-