சென்னையிலுருந்து காங்கேசன்துறைக்கு உல்லாசக் கப்பலில் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காங்கேசந்துறைக்கு வந்து செல்லும் “கோர்டிலியா” உல்லாசப்பயணக்கப்பலில் வந்து செல்லும் பயணிகளுக்கான சேவைகளை வழங்குவது தொடர்பில் வடமாகாண சுற்றுலாப் பணியகம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுடன் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட காணி ஆணையாளர், யாழ் இந்திய துணைத்தூதுவர், வடமாகாண துறைமுக அதிகாரசபை தலைவர், வடமாகாண சுற்றுலாப் பணியக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், தெல்லிப்பளை பிரதேச செயலகர், வலிகாமம் வடக்கு பிரதேச சபை செயலாளர், வடமாகாண கடற்படை அதிகாரி, காவல்துறை அதிகாரி, யாழ் மாவட்ட தனியார் உள்ளூர் போக்குவரத்து சங்க தலைவர் முதலியோர் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலின் போது, இந்த உல்லாசப்பயணக்கப்பல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சென்னையிலிருந்து புறப்பட்டு அம்பாந்தோட்டை, திருகோணமலை ஆகிய துறைமுகங்களில் தங்கி வெள்ளிக்கிழமை காங்கேசந்துறை துறைமுகத்தை வந்தடைந்து மீண்டும் சென்னையை சென்றடைகின்றது.
அவ்வாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் வந்திறங்கும் சுற்றுலாப்பயணிகளுக்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படாத நிலையே காணப்படுவதாக வடமாகாண சுற்றுலாப் பணியகத்தினர் சுட்டிக்காட்டியிருந்தனர். அதனை தொடர்ந்து பயணிகளுக்குரிய அடிப்படை வசதிகள், உள்ளூர்ப் பயணங்களுக்குரிய வாகன ஒழுங்குகள், சுற்றுலா வழிகாட்டும் ஒழுங்குகள் என்பவற்றை செய்வதற்குரிய பொறிமுறைகள் தொடர்பாக ஆளுநர் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடினார்.